ஜோலார்பேட்டைக்கு வந்த கோட்ட மேலாளரின் சிறப்பு ரெயில் நடுவழியில் பழுதானதால் பரபரப்பு


ஜோலார்பேட்டைக்கு வந்த கோட்ட மேலாளரின் சிறப்பு ரெயில் நடுவழியில் பழுதானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Nov 2019 10:15 PM GMT (Updated: 21 Nov 2019 7:22 PM GMT)

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு ஆய்வுக்கு வந்த கோட்ட ரெயில்வே மேலாளரின் சிறப்பு ரெயில் நடுவழியில் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை,

தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜனவரி 10-ந் தேதி அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களை ஆய்வு செய்ய உள்ளார். இதனையொட்டி தெற்கு மண்டல ரெயில்வே கோட்ட மேலாளர் பி.மகே‌‌ஷ், முதுநிலை வணிக பிரிவு மேலாளர் டாக்டர் விஜயமாலா மற்றும் அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு ரெயிலில் நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டனர்.

அந்த ரெயில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆம்பூர் அருகே வந்தபோது திடீரென ஏற்பட்ட கோளாறால் நடுவழியில் பழுதாகி நின்றது. இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரி சுந்தரமூர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்படைந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கோட்ட மேலாளர் சிறப்பு ரெயில் நின்ற இடத்துக்கு வேறொரு ரெயிலில் வந்தனர். பின்னர் கோட்ட ரெயில்வே மேலாளர் உள்பட அதிகாரிகள் அந்த ரெயிலில் ஏறி பழுதான ரெயிலையும் இணைத்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள், அலுவலக அறைகள், ரெயில்வே காலனி, ரெயில்வே ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், பழைய கட்டிடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

இதில் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தை விரிவுபடுத்தவும், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆர்.ஆர்.ஐ. கேபினை இடித்து விட்டு, தற்போது அதற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிட பணியினையும், டிக்கெட் கவுண்ட்டர், பொறியியல் பிரிவு, ரெயில்வே தகவல் மையம் போன்றவைகளையும், ரெயில்வே கோட்டத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த பணிகள் அனைத்தும் விரிவுபடுத்தவும், புதிய கட்டிடங்கள் அமைக்கவும் திட்ட அறிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரி சுந்தரமூர்த்தி, ரெயில்வே மண்டல பாதுகாப்பு ஆணையர் ராம்ப்ரசாத், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்பட ரெயில்வே அதிகாரிகள் பலர் இருந்தனர்.

இதனிடையே சிறப்பு ரெயிலில் பழுதை சரி செய்யும் பணி தொடர்ந்து நடந்தது. பிற்பகல் 3 மணி அளவில் ஆய்வினை முடித்து கொண்டு, தனி ரெயிலான குளிர்சாதன பெட்டியில் ஏற வந்தனர். ஆனால் அந்த ரெயிலின் பழுது பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து சாதாரண ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர்.

Next Story