ராமேசுவரம் மீனவர்களை மிரட்ட துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை


ராமேசுவரம் மீனவர்களை மிரட்ட துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை
x
தினத்தந்தி 21 Nov 2019 11:15 PM GMT (Updated: 21 Nov 2019 7:30 PM GMT)

இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு மிரட்டியதுடன், ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்தனர். கப்பலைக் கொண்டு மோதியதில் படகு சேதம் அடைந்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ஒரு கப்பலில் இருந்து வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டு மிரட்டினர்.

இதைக்கண்டு பயந்து போன ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் வேகமாக வலைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேறு பகுதியை நோக்கி மீன் பிடிக்க சென்றனர்.

படகு மீது மோதினர்

அவர்களை விரட்டி வந்து ஒரு படகு மீது வேகமாக ரோந்து கப்பலை வைத்து இலங்கை கடற்படையினர் மோதினர். இதில் அந்த படகு சேதம் அடைந்தது.

மேலும் இலங்கை கடற்படையினர் அந்த படகில் இருந்த மீனவர்களை எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர்.

இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்ததால் நேற்று மிகவும் குறைந்த அளவு மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினார்கள். அது போல் கப்பலால் மோதியதில் சேதமான ராமேசுவரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகும் துறைமுகம் அருகே கொண்டு வரப்பட்டு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், ரோந்து கப்பலை வைத்து மோதி இதுவரை 3 படகை இலங்கை கடற்படை சேதமாக்கி இருப்பதால் தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர் தாக்குதல்

இதுபற்றி மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறியதாவது:-

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 4 நாட்களிலேயே தமிழக மீனவர்களின் மேலும் ஒரு படகை ரோந்து கப்பலை வைத்து மோதி இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி உள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இது குறித்து மத்திய-மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள இருநாட்டு மீனவர்கள் சந்திப்பு, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பாக்ஜலசந்தி கடலில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் மிரட்டல் இல்லாமல் மீன் பிடிக்க ஒரு ஒப்பந்தம் போட்டு, மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story