மேயர்-நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் முறையீடு


மேயர்-நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் முறையீடு
x
தினத்தந்தி 21 Nov 2019 10:45 PM GMT (Updated: 21 Nov 2019 7:49 PM GMT)

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இதனை வழக்காக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினர்.

அப்போது வக்கீல் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் ஆஜராகி, தமிழக மாநகராட்சி மேயர் பதவிகள், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது குறித்த அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக உள்ளது. இதில் சட்டப்படியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அரசியல் பதவிக்கு வர நினைப்பவர்கள், குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்தும். இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.

ரத்து செய்ய வேண்டும்

மேலும் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைப்பதாகவும் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இது உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கையாகவே உள்ளது. எனவே மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் தொடர்பான அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எனவே இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகளிடம் வக்கீல்கள் முறையிட்டனர்.

வழக்கு தாக்கல்

ஆனால் நீதிபதிகள், தங்களது கோரிக்கையை வழக்காக தாக்கல் செய்யும்பட்சத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். எனவே இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story