கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு - அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்


கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு - அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:30 PM GMT (Updated: 21 Nov 2019 8:01 PM GMT)

கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார்.

நெல்லை,

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாளையங்கோட்டை சாராள்தக்கர் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய செயலாளர் குமரன் வரவேற்று பேசினார். தொழிலாளர் ஆணையாளர் நந்தகோபால், திட்ட விளக்க உரையாற்றினார். பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் மனோகரன் பேசினார்.

விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 667 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.15 லட்சத்து 700 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 1,438 தொழிலாளர்களுக்கு ரூ.29 லட்சத்து 60 ஆயிரத்து 750 மதிப்பில் கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. விழாவில் அமைச்சர் நிலோபர் கபீல் பேசியதாவது:-

தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா ஆட்சிதான் பொற்காலமாகும். தற்போது நடக்கின்ற ஜெயலலிதா ஆட்சியில் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். அவருடைய வழியில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி அதை ரூ.5 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளார். வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்களையும் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்கு கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அம்மா உணவகத்தில் ஸ்மார்ட் கார்டை காட்டி இலவசமாக சாப்பிட்டுக் கொள்ளலாம். 47 நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் ரூ.44 லட்சத்து 61 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ரூ.1,265 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., ஆவின் தலைவர் சுதாபரமசிவம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரிய செயலாளர் தமிழரசி, தொழிலாளர் இணை ஆணையாளர் ஹேமலதா, துணை ஆணையாளர் சுடலைராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் மின்னல்கொடி, கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் மகாலிங்கம், அ.தி.மு.க. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் உமாபதிசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் ராதாகிருஷ்ண பாண்டியன் நன்றி கூறினார்.

Next Story