குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது டீக்கடை தொழிலாளியை கொன்ற நண்பர் கைது


குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது டீக்கடை தொழிலாளியை கொன்ற நண்பர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2019 10:45 PM GMT (Updated: 21 Nov 2019 8:46 PM GMT)

அருப்புக்கோட்டையில் மதுரை பேரையூரை சேர்ந்த டீக்கடை தொழிலாளியை வெட்டிக்கொன்ற அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

அருப்புக்கோட்டை,

மதுரை அருகே உள்ள பேரையூர் கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது26). இவர் அருப்புக்கோட்டை அன்பு நகரில் தங்கி நெசவாளர் காலனி பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நகராட்சி பள்ளி முன்பு தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த பகுதியை சேர்ந்தோர் இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்று ராஜபாண்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார்.

நண்பர்

இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ராஜபாண்டியை கொலை செய்தவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடினர். முதல்கட்ட விசாரணையில் ராஜபாண்டியை கொலை செய்தவர் அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி ்மோகனகண்ணன்(40) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது கொலைக்கான காரணம் வெளியானது.

கொண்டு சென்ற அரிவாளால்...

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலையில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். எனினும் ஆத்திரம் தணியாத ராஜபாண்டி அரிவாளுடன் மோகனகண்ணன் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரை மோகனகண்ணன் சமரசம் செய்வது போல நடித்துள்ளார். பின்னர் இரு சக்கர வாகனத்தில் இருவரும் வந்துள்ளனர். ராஜபாண்டி வாகனத்தை ஓட்ட பின்னால் மோகனகண்ணன் அமர்ந்து வந்துள்ளார்.

நகராட்சி பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது ராஜபாண்டியை திடீரென்று கீழே தள்ளி விட்ட மோகனகண்ணன் தம்மை வெட்டுவதற்காக ராஜபாண்டி ஏற்கனவே கொண்டு வந்திருந்த அரிவாளை பிடுங்கி அவரை வெட்டியுள்ளார்.பிடிபட்ட அவர்இந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story