முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு


முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 21 Nov 2019 10:30 PM GMT (Updated: 21 Nov 2019 8:56 PM GMT)

முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தால், தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன்(ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன்(விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 1,285 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரத்து 984 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி கூட்டங்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெற்று, தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் முன்பு மக்கள் அரசை தேடி செல்லும் நிலை இருந்தது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த நிலையை மாற்றி, மக்களை தேடி அரசு செல்லும் நிலையை உருவாக்கினார். அந்த வகையில் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டது. ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டம் நாட்டுக்கே எடுத்துக்காட்டாக அமைந்து உள்ளது. இந்த திட்டத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக முதல்-அமைச்சருக்கு சூப்பர் முதல்-அமைச்சர் என்ற பெயர் கிடைத்து உள்ளது. மேலும் தமிழக முதல்-அமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மூலம் அனைத்து தாலுகாவிலும் உள்ள பயனாளிகளுக்கும் 100 சதவீதம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தாசில்தார்கள் ரகு (ஓட்டப்பிடாரம்), செல்வகுமார் (தூத்துக்குடி), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் சிவகாமிசுந்தரி (தூத்துக்குடி), தாமஸ் அருள் பயாஸ் (ஓட்டப்பிடாரம்), முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று விளாத்திகுளம் தனியார் மண்டபத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சின்னப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா வரவேற்று பேசினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளாத்திகுளம், எட்டயபுரம் தாலுகாக்களைச் சேர்ந்த 1,125 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 75 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் 474 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 471 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, கால்நடைத்துறை சார்பில் 24 பேருக்கு இலவச ஆடுகள், மாடுகள், மகளிர் திட்டத்தின் சார்பில் 16 பேருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், வேளாண்மை துறை சார்பில் 11 பேருக்கு விசைத்தெளிப்பான் கருவி, தார்ப்பாய், இடுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டது.

எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் 129 பேருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

விழாவில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சங்கர நாராயணன், தாசில்தார்கள் ராஜ்குமார் (விளாத்திகுளம்), அழகர் (எட்டயபுரம்), சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் கணேசன், சங்கர நாராயணன், யூனியன் ஆணையாளர்கள் தங்கவேல், ஹரிகர பாலகிரு‌‌ஷ்ணன் (விளாத்திகுளம்), நவநீதகிரு‌‌ஷ்ணன், சிவபாலன் (புதூர்),

விளாத்திகுளம் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் தனசிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன் (வேளாண்மை), வேளாண்மை உதவி இயக்குனர் பூவண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story