ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை: 2021-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிதான் மலரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி


ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை: 2021-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிதான் மலரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி
x
தினத்தந்தி 21 Nov 2019 10:45 PM GMT (Updated: 21 Nov 2019 9:01 PM GMT)

2021-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிதான் மலரும் என்று ரஜினிகாந்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

தூத்துக்குடி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, 33 ஆண்டுகால கோரிக்கையை, மக்களின் எண்ணப்படி அம்மா அரசு நிறைவேற்றி உள்ளது. புதிதாக தென்காசி மாவட்டத்தை அறிவித்து நாளை (அதாவது இன்று) மாவட்டம் தொடங்கப்பட உள்ளது என்று கூறினார். தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி: 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்று ரஜினிகாந்த் கூறி உள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அவருக்கு எந்த அடிப்படையில் அதிசயம் என்று தெரியவில்லை. 2021-ம் ஆண்டை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சிதான் மலரும் என்ற அதிசயத்தை அவர் கூறி இருப்பார் என்று கருதுகிறேன்.

கேள்வி: கமலும், ரஜினிகாந்தும் இணைந்து தேர்தலை சந்திக்கப்போவதாக கூறி இருக்கிறார்களே?

பதில்: நான் ஏற்கனவே பலமுறை கூறி உள்ளேன். ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிக்கட்டும், அப்போது கருத்துக்களை தெரிவிக்கிறேன்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடுவதாக கூறி இருக்கிறார்கள். பா.ஜனதா கூட்டணி தொடருமா?

பதில்: தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வைக்கப்பட்ட கூட்டணி தொடருகிறது.

கேள்வி: 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக உங்களை முன்னிறுத்தி பிரசாரம் இருக்குமா?

பதில்: இன்னும் தேர்தலே அறிவிக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சராக வருவார்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் முறைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதனை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தது தான் விந்தையாக இருக்கிறது. அவர் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த போது, மறைமுக தேர்தல் எதற்காக கொண்டு வரப்படுகிறது என்று சட்டமன்றத்திலேயே தெரிவித்து இருக்கிறார். அதனை தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. 31-06-2006 அன்று மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறார். அப்போது அவர் கூறும் போது, அசாம், குஜராத் என்று பல மாநிலங்களை பட்டியலிட்டு, அங்கெல்லாம் மறைமுக தேர்தல் மூலம்தான் தலைவரை தேர்வு செய்கிறார்கள் என்று கூறி தீர்மானத்தை நிறைவேற்ற கூறினார்.

மேலும் 31-06-2006 அன்று தீர்மானத்தின் மீது பேசும் போது, மேயர் ஒரு கட்சியை சார்ந்தவராகவும், மெஜாரிட்டியாக வரும் உறுப்பினர்கள் வேறு கட்சியை சார்ந்தவராகவும் வந்து விடுவதால், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை மன்ற கூட்டங்களில் வைத்து நிறைவேற்ற முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறது. இதனால் மக்கள் பிரச்சினை தேக்கம் அடையும் நிலை இருக்கிறது. உதாரணமாக விழுப்புரம், விருதாச்சலம் நகராட்சிகளில் 2001 தேர்தலுக்கு பிறகு ஜூன் 2006 வரை முறையாக கூட்டங்கள் நடைபெறவில்லை. தீர்மானங்களும் முறையாக நிறைவேற்றப்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஆகவே, இந்த நிலையை எல்லாம் கருத்தில் கொண்டு, இந்த முறையை அமல்படுத்தி உள்ளோம். ஆகையால் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி உள்ளார். அவரே சொல்லிவிட்டார். அன்று அவர் செய்தால் சரி என்கிறார்கள். நாங்கள் நடைமுறைப்படுத்தினால் தவறு என்கிறார்கள். இது அவையில் பதிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே 1996-ம் ஆண்டு வரை மறைமுக தேர்தல்தான் நடந்தது. ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு மறைமுக தேர்தல்தான் நடந்தது. 1996-ல் அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதி நேரடி தேர்தல் முறையை கொண்டு வந்தார். மீண்டும் அவர்களே மாற்றினார்கள். தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதிலும் மக்கள்தான் ஓட்டு போடுகின்றனர்.

கேள்வி: மறைமுக தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளார்களே?

பதில்: நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு எப்படி தேர்தல் நடக்கிறது. அதற்கு ஒரு மாதிரியும், நகர்ப்புறத்துக்கு ஒரு மாதிரியும் தேர்தல் நடத்த வேண்டுமா?.

கேள்வி: பா.ஜனதாவும் மறைமுக தேர்தலை எதிர்த்து உள்ளது பற்றி..

பதில்: முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவாக கூறி உள்ளார். அவர்கள் இதனை எதிர்க்கவில்லை.

கேள்வி: 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேயர் பதவிக்கு மீண்டும் நேரடி தேர்தலை கொண்டு வந்தார். அதனை நீங்கள் மாற்றுகிறீர்களே?

பதில்: ஏற்கனவே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப கொள்கை முடிவு அரசு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் தற்போது, தி.மு.க. தலைவர் கூறிய கருத்தின் அடிப்படையில் மாற்றி அமைத்து உள்ளோம்.

கேள்வி: இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பொறுப்பு ஏற்று உள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது பற்றி அந்த நாட்டு மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். அது தமிழகமோ, இந்தியாவின் ஒரு மாநிலமோ அல்ல. அது அண்டை நாடு. அந்த நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள்.

கேள்வி: சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி கார்டாக மாற்றுவதை மக்கள் வரவேற்று உள்ளனர். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஏற்கனவே பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல ஏழை மக்கள் நலத்திட்ட உதவிகளை பெற முடியாத நிலை இருந்தது. அப்போது பலர் ஏழையாக இருக்கிறார்கள், ஆனால் தவறுதலாக சர்க்கரை ரேஷன் கார்டு பெற்று இருப்பதால், அரிசி ரேஷன் கார்டாக மாற்ற கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று மாற்றுவதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

கேள்வி: பொதுவினியோக பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளதா?

பதில்: இருப்பு உள்ளது.

கேள்வி: குடிமராமத்து பணிகள் 100 சதவீதம் முடிந்து உள்ளதா?

பதில்: தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. மழை பெய்த காரணத்தால் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து இருப்பதால் குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் குளங்களை தூர்வார முடியாத நிலை உள்ளது. ஏரியில் தண்ணீர் வற்றிய பிறகு மீண்டும் குடிமராமத்து திட்டம் தொடரும்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஆளும் கட்சி ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு வருவது பற்றி கருத்து என்ன?

பதில்: சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த முடியாது. உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கொடுத்து உள்ளது. அரசும் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. தேர்தல் ஆணையம்தான் தேர்தலை அறிவிக்க வேண்டும். அரசு தேர்தலை நடத்தவில்லை. தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதன்படி தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று கருதுகிறோம். நிச்சயமாக அ.தி.மு.க. தேர்தலை எதிர்கொள்ளும், வெற்றி பெறும்.

கேள்வி: உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவிக்கப்படும்?

பதில்: அதனை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

கேள்வி: ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?

பதில்: இன்னும் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. முழுமையான கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

கேள்வி: பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000 உயர்த்தி வழங்க வாய்ப்பு உள்ளதா?

பதில்: இதுவரை அரசிடம் அப்படி எந்த எண்ணமும் இல்லை. நீங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து உள்ளர்கள்.

கேள்வி: அ.ம.மு.க.வில் இருந்து வேறு யாரும் அ.தி.மு.க.வுக்கு வர வாய்ப்பு உள்ளதா?

பதில்: எல்லா மாவட்டத்தில் இருந்தும் அ.ம.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சாரை சாரையாக அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story