எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் உள்ள மரங்களை வெட்ட தடை ஐகோர்ட்டு உத்தரவு
எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் உள்ள மரங்களை வெட்ட ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
சென்னை,
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இருக்கும் இந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கேப்டன் பி.பி.நாராயணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கஜா புயலினால் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. எஞ்சிய மரங்களையும் கட்டிடம் கட்டுவதற்காக வெட்டுவது சட்டவிரோதம். இந்த மரங்களில் பலவகையான பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன. எனவே, இந்த மரங்களை வெட்ட தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் கொண்ட சுற்றுச்சூழல் வழக்குகளை விசாரிக்கும் டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எழும்பூர் கண் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட தடை விதித்தனர். மேலும், மரங்களை வெட்டாமல் புதிய கட்டிடம் கட்ட முடியுமா?, மாற்று இடம் உள்ளதா?, மரங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாமல், அதை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நட்டு பராமரிக்க முடியுமா? என்பது உள்பட பல கேள்விகளை கேட்ட நீதிபதிகள், அதற்கு பதில் அளிக்கும்படி தமிழக பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story