அயனாவரத்தில் பரபரப்பு சம்பவம் சொத்துக்காக மாமியாரை கடத்திய மருமகள்
அயனாவரத்தில், சொத்துக்காக தனது மாமியாரை கடத்திய மூத்த மருமகளை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திரு.வி.க.நகர்,
சென்னை தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்தவர் சுப்புராயன். இவருடைய மனைவி பத்மினி(வயது 65). இவர்களுடைய மகன்கள் செந்தில் மற்றும் ராஜ்குமார். சாலை ஒப்பந்ததாரரான சுப்புராயன், படப்பையில் வீடு மற்றும் நிலங்கள் வாங்கி தனது குடும்பத்துடன் வசதியாக வாழ்ந்து வந்தார்.
இவருடைய மூத்த மகன் செந்திலுக்கு பெரியபாளையம் அருகே உள்ள கொமக்கம்பேடுவைச் சேர்ந்த மேனகா(29) என்பவரையும், 2-வது மகன் ராஜ்குமாருக்கு ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ஆனந்தி என்பவரையும் திருமணம் செய்து வைத்தனர்.
2014-ம் ஆண்டு சொத்துக்காக மூத்த மகன் செந்தில், தனது தம்பி என்றும் பாராமல் ராஜ்குமாரை கூலிப்படை மூலம் கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் கைதாகி சிறை சென்ற செந்தில், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு அவர் மாயமானார். அவர் என்ன ஆனார்? என்பது இதுவரையிலும் தெரியவில்லை.
பிரித்து கொடுத்தார்
சொத்துக்காக குடும்பத்தில் கொலை நடந்ததால் சுப்புராயன், தனது சொத்தை 2 மகன்களின் குடும்பத்தினருக்கும் சமமாக பிரித்து கொடுத்தார். மேலும் தங்களின் வாழ்வாதாரத்துக்காக ஒரு வீடு மற்றும் கொஞ்சம் நிலத்தை வைத்துக்கொண்டார்.
இதற்கிடையில் மாயமான மூத்த மகன் செந்திலின் மனைவி மேனகா, தனது தோழியின் வீட்டில் தங்கினார். அப்போது தோழியின் கணவர் ராஜேஷ் கண்ணா, 2018-ம் ஆண்டு மேனகாவின் மாமனார் சுப்புராயனை கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி சிறை சென்ற ராஜேஷ்கண்ணா பின்னர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
மாமியாருக்கு மிரட்டல்
சொத்துக்காக தனது 2-வது மகன் ராஜ்குமார் மற்றும் கணவர் சுப்புராயன் கொலை செய்யப்பட்ட நிலையில், மூத்த மகன் செந்தில் மாயமானதால் படப்பையில் உள்ள வீட்டில் பத்மினி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
மூத்த மருமகள் மேனகா அடிக்கடி தனது மாமியார் பத்மினி வீட்டுக்கு சென்று, அவரிடம் உள்ள மீதி சொத்தையும் தரும்படி கேட்டு மிரட்டி வந்தார். இதனால் பயந்துபோன பத்மினி, கடந்த 18-ந்தேதி அயனாவரத்தில் உள்ள தனது அக்கா மகள் அமுதா வீட்டுக்கு வந்து தங்கினார்.
கடத்தல்
இதையறிந்த மேனகா, தனது மாமியார் பத்மினியை தேடி தோழியின் கணவரான ராஜேஷ்கண்ணா மற்றும் கூட்டாளிகளுடன் 2 கார்களில் அமுதாவின் வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த தனது மாமியார் பத்மினியை அடித்து உதைத்ததுடன், துப்பாக்கி முனையில் அவரை தங்களது காரில் கடத்திச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா, சொத்து தகராறில் தனது சித்தியை அவருடைய மூத்த மருமகள் கடத்திச்சென்றதாக அயனாவரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து உதவி கமிஷனர் பாலமுருகன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடத்தப்பட்ட பத்மினியையும், அவருடைய மருமகள் மற்றும் கூட்டாளிகளையும் தேடி வந்தனர்.
மருமகள் கைது
கடந்த 2 நாட்களாக கடத்தப்பட்ட பத்மினியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரை கடத்திச்சென்ற கார் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது அது போலி என்பது தெரியவந்தது. செல்போன் சிக்னல் உள்ளிட்டவைகளை வைத்து போலீசார் தங்களை நெருங்கி விட்டதை அறிந்த கடத்தல் கும்பல், பத்மினியை நேற்று காலை அயனாவரத்தில் இறக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
“கடந்த 2 நாட்களாக பெரும்பாக்கம், சிட்லபாக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு தன்னை கடத்திச்சென்ற அந்த கும்பல், சொத்தை எழுதி தரும்படி கேட்டு அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும், போலீசார் நெருங்கி வந்துவிட்டதால் என்னை உயிருடன் விட்டுவிட்டனர். இல்லாவிட்டால் சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு என்னையும் கொலை செய்து இருப்பார்கள்” எனவும் போலீசாரிடம் பத்மினி தெரிவித்தார்.
இதையடுத்து பத்மினி கொடுத்த தகவலின்பேரில் அவருடைய மூத்த மருமகள் மேனகாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் சொத்துக்காக சுப்புராயன், அவரது 2-வது மகன் கொலை செய்யப்பட்ட நிலையில் மாயமான அவரது மூத்த மகன் செந்திலும் கொலை செய்யபட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story