தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு மாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பு அதிகாரி தகவல்


தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு மாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:46 PM GMT (Updated: 21 Nov 2019 10:46 PM GMT)

தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என மாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனையிலும் தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநில குழந்தைகள் நல ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் சீனிவாசன் கூறியதாவது:-

குழந்தை பிறந்த 7 நாட்களும், குழந்தைகளை தாய்மார்கள் எவ்வாறு பராமரிக்க வேண்டும், எவ்வகை ஊட்டசத்து உணவுகளை கொடுக்கவேண்டும் என, தாய்மார்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வைத்து தான் ஒரு நாட்டின் ஆரோக்கியம் கணக்கிடப்படுகிறது.

குறைவான இறப்பு விகிதம்

பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளை சார்ந்தே உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 லட்சத்து 76 ஆயிரம் பிரசவங்கள் நடந்தது. இதில் 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலும், 30 சதவீத பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளிலும் நடந்தன. இந்த பிரசவத்தில் உடல் நல குறைவுடன் பிறந்த 1 லட்சத்து 11 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ள 73 வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 ஆயிரத்து 500 குழந்தைகள் இறந்துள்ளது. இந்த இறப்பு விகிதம் 5.6 சதவீதமாக இருக்கிறது. உலக அளவில் கணக்கிடும் போது இது மிகவும் குறைவான இறப்பு விகிதமாகும்.

தமிழகம் 2-வது இடம்

இதன் மூலம் உலகளவில் நம் தமிழ்நாடு, சிசு மரண இறப்பு விகிதத்தில்(ஐ.எம்.ஆர்) 17-ல் இருந்து 16-ஆகவும், பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தில்(என்.எம்.ஆர்) 12-ல் இருந்து 11-ஆகவும் குறைந்துள்ளது. இந்திய அரசு 2030-ம் ஆண்டுக்கு இறப்பு விகிதம் ஒற்றை இலக்காக குறைக்க வேண்டும் என நிர்ணயம் செய்ததை, தமிழக அரசு 2020-ம் ஆண்டுக்கு முன்னரே அந்த இலக்கை எட்டி விட்டது. இந்த இறப்பு விகிதத்தை மேலும் குறைப்பதற்காக டாக்டர்கள் முயற்சித்து வருகின்றனர்.

‘பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ள மாநிலங்களில், கேரளா முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும், மராட்டிய மாநிலம் 3-வது இடத்திலும் உள்ளது. பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு செவிலியர்களை சார்ந்தது.

பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் பரவும் தன்மை அதிகம். இதில் சில சவால்களும் உள்ளது. முதலில் குறைபிரசவத்தை குறைக்க வேண்டும். இந்த குறைபிரசவத்தால் கடந்த ஆண்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளில் 1500 குழந்தைகளின் எடை 1 கிலோவுக்கு குறைவாக இருந்தது. எடை குறைவான 1,500 குழந்தைகளில் 50 சதவீத குழந்தைகளின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. எடை குறைவான குழந்தைகளை சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றுவதை நாங்கள் சவாலாக கருதுகிறோம். இந்த 50 சதவீதத்தை, 100 சதவீதமாக உயர்த்த முழு முயற்சியை நாங்கள் எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story