அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கு: ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு டேனிஸ் ஆஜர்


அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கு: ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு டேனிஸ் ஆஜர்
x
தினத்தந்தி 23 Nov 2019 3:45 AM IST (Updated: 22 Nov 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கின் விசாரணைக்காக ஊட்டி கோர்ட்டில் மாவோயிஸ்டு டேனிஸ் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஊட்டி,

கேரள மாநிலம் அகழி என்ற இடத்தில் மாவோயிஸ்டு இயக்கத்துக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் பழங்குடியின மக்களிடம் பேசியதாக கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியை சேர்ந்த டேனிஸ் என்ற கிரு‌‌ஷ்ணா(வயது 31) என்பவரை கேரள போலீசார் கடந்த ஆண்டு கைது செய்து திருச்சூர் சிறையில் அடைத்தனர். கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கொம்பை கிராமத்தில் மாவோயிஸ்டுகள் புகுந்து அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொலக்கொம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் டேனிசுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறும் கொலக்கொம்பை போலீசார் ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து கோர்ட்டில் வாரண்டு பெறப்பட்டு, கேரளா போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. திருச்சூர் சிறையில் இருந்து டேனிசை கேரள போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்தி பலத்த பாதுகாப்புடன் ஊட்டி கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது அரசு வக்கீல் நந்தகுமார், ‘டேனிஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் நாட்கள் அனுமதிக்க வேண்டும்‘ என்று மனுத்தாக்கல் செய்தார். இதனால் நீதிபதி வடமலை வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(டிசம்பர்) 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அப்போது நீதிபதி வடமலையிடம், தனது வக்கீலிடம் பேச அனுமதிக்குமாறு டேனிஸ் கேட்டார். அதன்பின்னர் கோர்ட்டுக்குள் வக்கீலிடம் 10 நிமிடம் பேச அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து கேரள போலீசார் டேனிசை திருச்சூர் சிறைக்கு அழைத்து சென்றனர். கோர்ட்டுக்கு வெளியே அழைத்து வந்தபோது, ‘தியாகிகள் மணிவாசகம், அஜிதா, கார்த்திக், அரவிந்த்துக்கு வீரவணக்கம்‘ என்று அவர் கோ‌‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story