கோவை கோர்ட்டில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மறுவிசாரணை தொடங்கியது


கோவை கோர்ட்டில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மறுவிசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 23 Nov 2019 4:15 AM IST (Updated: 23 Nov 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

கோவை கோர்ட்டில் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மறுவிசாரணை தொடங்கியது.

கோவை,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போலீஸ் துணை சூப்பிரண்டாக (டி.எஸ்.பி.) பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது அவர் முகாம் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் உயர் அதிகாரிகளின் தொந்தரவு காரணமாகதான் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தந்தை ரவி புகார் அளித்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே விஷ்ணுபிரியாவின் தந்தை கூறிய புகாரில் எவ்வித ஆதாரமும் இல்லை என்றுக்கூறி தற்கொலை வழக்கை கைவிடுவதாக கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இதற்கு ரவி தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. எனவே மறுவிசாரணை நடத்த கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவின்பேரில் சி.பி.ஐ. மறுவிசாரணை செய்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது. ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தாமல், பழைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததாக ரவி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் சி.பி.ஐ. தாக்கல் செய்த அந்த மறு விசாரணை அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவி, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி அளித்த மனுவை தனி புகாராக எடுத்துக்கொண்டு கோர்ட்டே விசாரணை நடத்தும் என்றும், விஷ்ணுபிரியாவை போலீஸ் உயர் அதிகாரிகள் தற்கொலைக்கு தூண்டினார்களா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தாா்.

இதையடுத்து இந்த வழக்கு மறுவிசாரணை நேற்று தொடங்கியது. அப்போது விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, நீதிபதி ரவி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் விஷ்ணுபிரியாவின் தாயாரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி ரவி தனது உத்தரவில் கூறியிருந்தார்.

பின்னர் கோர்ட்டைவிட்டு வெளியே வந்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி நிருபர்களிடம் கூறும்போது, எனது மகள் தற்கொலைக்கு காரணம் போலீஸ் உயர் அதிகாரிகள்தான் என்று நீதிபதியிடம் கூறினேன். இது தொடர்பாக நீதிபதியிடம் தனியாக ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்தேன். அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

Next Story