‘எனது பள்ளி- எனது மரம்’ திட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் 50 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு சென்னை மாநகராட்சி வழங்கியது


‘எனது பள்ளி- எனது மரம்’ திட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் 50 மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு சென்னை மாநகராட்சி வழங்கியது
x
தினத்தந்தி 23 Nov 2019 3:00 AM IST (Updated: 23 Nov 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் 50 மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஊக்கப் பரிசு வழங்கியது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் உபயோகிப்பதால் ஏற்படும் பல்வேறு தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவின்பேரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவான்மியூரில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் 1,500 மாணவ, மாணவிகள், மற்றும் 80 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பிளாஸ்டிக் தவிர்த்து, வாழை இலைகள், பாக்கு மரத் தட்டுகள், துணிப்பைகள், சணல் பைகள் போன்றவை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு துணிப்பைகளும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதையடுத்து சுற்றுச்சூழல் ஒத்துழைப்புடன் ‘எனது பள்ளி-எனது மரம்’ திட்டத்தின் படி மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் 50 மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. முகாமில் மாநகராட்சி கல்வி அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story