கோட்டார் கால்வாயில் 45 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் நோட்டீஸ்


கோட்டார் கால்வாயில் 45 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் நோட்டீஸ்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 23 Nov 2019 9:11 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கோட்டார் கால்வாயில் 45 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து பீச்ரோடு சந்திப்பு செல்லும் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் இருந்து சரலூர் பகுதிக்கு செல்லும் சாலையின் ஒரு புறத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதாவது கோட்டார் கால்வாயின் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக கூறி சுமார் 45-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கினர்.

அந்த நோட்டீசில் 21 நாட்களுக்குள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அவரவர்களே இடித்து அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொதுப்பணித்துறை சார்பில் அகற்றப்படும் என்று கூறியிருந்ததாக தெரிகிறது. இதற்கு அப்பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நேற்று எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதம மந்திரி திட்டம்

மேலும் இதுகுறித்து அவர்கள் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வான சுரேஷ்ராஜனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் அவர் அதிகாரிகளால் நோட்டீஸ் வழங்கப்பட்ட வீடுகளை ஒவ்வொன்றாக மக்களுடன் சென்று பார்வையிட்டார்.

இதில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட புதிய வீடுகளும் இருந்தன. பின்னர் அவர் அப்பகுதி மக்களிடம் இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசி நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதுவரை மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் சமாதானப்படுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கலெக்டரிடம் மனு

ஒரு காலத்தில் கோட்டார் கால்வாய் கரையின் நீர்நிலை புறம்போக்கு நிலமாக இருந்த இந்த பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையின் ஒருபுறத்தில் சுமார் 45-க்கும் மேற்பட்டோர் கடந்த 50, 60 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். தற்போது இந்த பகுதியில் நீர்வழிப்பாதையும் இல்லை. பழைய ஆவணங்களின்படி இந்த இடம் நீர்நிலை புறம்போக்கு என்றும், அதில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த பகுதி மக்களுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் முன்பு குளங்களாக இருந்த இடங்களில் தான் அண்ணா பஸ் நிலையம், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே கட்டப்படும் மாநகராட்சி அலுவலகம் போன்றவை உள்ளன. நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் கிடையாது. எனவே அரசுகளால் பட்டா வழங்கப்பட்டு, வீடுகள் கட்டி குடியிருந்து வரும் மக்கள் நலன் கருதி இந்த வீடுகளை இடிக்கக்கூடாது. இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க உள்ளேன்.

இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார். அவருடன் வக்கீல் மகேஷ் உள்பட பலர் உடன் சென்றனர்.

Next Story