மனைவி, குழந்தை இருப்பதை மறைத்தார்: செல்போனில் வந்த தகவலால் வாலிபரின் 2-வது திருமணம் தடுத்து நிறுத்தம் - மணமகள், வேறொருவரை கரம் பிடித்தார்


மனைவி, குழந்தை இருப்பதை மறைத்தார்: செல்போனில் வந்த தகவலால் வாலிபரின் 2-வது திருமணம் தடுத்து நிறுத்தம் - மணமகள், வேறொருவரை கரம் பிடித்தார்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 24 Nov 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

ராமநகரில் திருமணமாகி மனைவி, குழந்தை இருப்பதை மறைத்து வாலிபர் 2-வது திருமணம் செய்ய முயன்றார். செல்போனில் இதுபற்றி தகவல் வந்ததால் இந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மணமகள், வேறொரு வாலிபரை கரம்பிடித்தார்.

ராமநகர்,

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா எலகேரி கிராமத்தை சேர்ந்தவர் சித்தராஜ். இவரது மனைவி வெங்கட லட்சுமியம்மா. இந்த தம்பதியின் மகள் பாக்கியஸ்ரீ (வயது 23). இவருக்கும், எலியூரு கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 வீட்டு பெற்றோரும் பேசி திருமணம் செய்ய முடிவு செய்தனர். 6 மாதங்களுக்கு முன்பே பசவராஜிக்கும், பாக்கியஸ்ரீக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்று இருந்தது.

பின்னர் இரு வீட்டினரும் பேசி, பசவராஜ், பாக்கியஸ்ரீக்கு 22-ந் தேதி (அதாவது நேற்று முன்தினம்) திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அவர்களது திருமணம் நேற்று முன்தினம் காலையில் சென்னப்பட்டணா அருகே திட்டேமாரனஹள்ளியில் உள்ள மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இருவீட்டாரும் செய்து வந்தனர். முன்னதாக அதே மண்டபத்தில் வைத்து பசவராஜ், பாக்கியஸ்ரீயின் திருமண வரவேற்பு நடைபெற இருந்தது. அதற்காக மணமகன், மணமகள் தயாராகி கொண்டிருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் மணமகள் பாக்கியஸ்ரீயின் தாய் வெங்கடலட்சுமியம்மாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர் முனையில் பேசிய மர்மநபர், உங்களது மகளுக்கு திருமணமாக உள்ள பசவராஜிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது, குழந்தையும் இருக்கிறது, அவர் உங்களது மகளை ஏமாற்றி திருமணம் செய்ய இருக்கிறார் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதை கேட்டு வெங்கடலட்சுமியம்மா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தனது கணவர், மகள் மற்றும் குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் பசவராஜ், அவரது குடும்பத்தினரிடம் பாக்கியஸ்ரீயின் குடும்பத்தினர், உங்களது மகனுக்கு திருமணமாகி, குழந்தை இருப்பதை மறைத்து விட்டு, எங்களது மகளை ஏமாற்றி திருமணம் செய்ய முயற்சிக்கிறீர்கள் என்று கூறி தகராறு செய்தார்கள். ஆனால் தனக்கு திருமணமாகவில்லை என்று பசவராஜ் கூறினார். அவரது குடும்பத்தினரும் பசவராஜிக்கு திருமணமாகவில்லை, யாரோ தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர் என்று கூறி பாக்கியஸ்ரீயின் குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

இதையடுத்து, சென்னப்பட்டணா போலீஸ் நிலையத்தில் பசவராஜ் குறித்து பாக்கியஸ்ரீயின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். பின்னர் 2 குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் பசவராஜிக்கு வேறு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டதால், தங்களது மகளை திருமணம் செய்து கொடுக்க மாட்டோம், எங்களை ஏமாற்றி விட்டனர், எங்களது மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம் என்று போலீசாரிடம் பாக்கியஸ்ரீயின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

இதனால் பசவராஜ், பாக்கியஸ்ரீயின் குடும்பத்தினரை சமாதானப்படுத்த போலீசார் நடத்திய அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அதே நேரத்தில் தங்களது மகளுக்கு, வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்து வைக்கவும் பாக்கியஸ்ரீயின் குடும்பத்தினர் முடிவு செய்தார்கள்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் பசவராஜிக்கு மைசூருவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகி, குழந்தை இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணுடன் வாழ பிடிக்காமல் பசவராஜ் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் தனக்கு திருமணமாகி மனைவி, குழந்தை இருப்பதை மறைத்துவிட்டு 2-வதாக பாக்கியஸ்ரீயை திருமணம் செய்ய பசவராஜ் திட்டமிட்டதும் உறுதியானது. அதுபற்றி பாக்கியஸ்ரீயின் குடும்பத்தினருக்கு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, பசவராஜிடன் பாக்கியஸ்ரீக்கு நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் எலகேரி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் பாக்கியஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, திட்டேமாரனஹள்ளியில் உள்ள அதே மண்டபத்தில் வைத்து ஆனந்த் மற்றும் பாக்கியஸ்ரீக்கு திருமணம் நடைபெற்றது.

பசவராஜிக்கு திருமணம் நடந்திருந்தும், அதனை மறைத்துவிட்டு பாக்கியஸ்ரீயை 2-வது திருமணம் செய்ய முயன்றது பற்றி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தகவல் தெரிவித்த மர்மநபர் யார்? என்பது தெரியவில்லை. ஆனால் அந்த நபர் தகவல் கொடுத்ததால் பசவராஜ் தனது முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ய முயன்றது தடுக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னப்பட்டணா போலீசார் வழக்குப்பதிவு செய்து பசவராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராமநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story