மனநலம் பாதித்த நிலையில் சென்னையில் சுற்றித்திரிந்த ஜார்கண்ட் வாலிபர் மீட்பு உறவினரிடம் ஒப்படைப்பு
சென்னையில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்த ஜார்கண்ட் வாலிபர் மீட்கப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னை,
‘உதவும் கரங்கள்’ எனும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் வித்யாசாகர், கடந்த அக்டோபர் மாதம் திருவேற்காடு நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது வேலப்பன்சாவடி பாலம் அருகே நீண்ட தலைமுடி, தாடியுடன் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனியாக பேசிக்கொண்டு இருந்தார். அருகில் சென்று பேச முயன்றாலும், அந்த நபர் கண்ணை மூடியபடி ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தார்.
இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அந்த நபர் உதவும் கரங்கள் மையத்துக்கு அழைத்து வரப்பட்டார். தொண்டு நிறுவன ஊழியர்கள் அவரது நீண்ட முடியை வெட்டி அழகாக்கி, குளிக்க வைத்து, உணவும் அளித்து பராமரித்தனர். அவரிடம் பேச்சு கொடுக்கையில், தனது பெயர் பிரதான் ஹேம்ப்ராம் என்றும், ஊர் குன்வர்பூர், சாகேப்கஞ்ச் என்றும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலம் சாகேப்கஞ்ச் மாவட்டம் குன்வர்பூரில் உள்ள சிலரை தொடர்புகொண்டு பிரதானின் புகைப்படத்தை அனுப்பினர். அந்த புகைப்படங்கள் அந்த மாவட்டம் முழுவதும் ‘வாட்ஸ்-அப்’பில் பரப்பப்பட்டன. இந்த புகைப்படங்களை பார்த்து பிரதானின் சகோதரர் ரேட்டா சென்னைக்கு வந்தார். அவரிடம் பிரதான் ஒப்படைக்கப்பட்டார்.
குடும்ப பிரச்சினை காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு, 15 வருடங்கள் பிரதான் சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் திடீரென்று அவர் காணாமல் போய்விட்டதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக அவரை தேடி வந்ததாகவும் ரேட்டா கண்ணீருடன் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து சில சிகிச்சைகள் மற்றும் மருந்துகளுடன் பிரதான் பத்திரமாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story