சாம்ராஜ்நகரில் மகளின் திருமணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு: 5 ஆயிரம் மரக்கன்றுகளையும் வினியோகித்த சமூகஆர்வலர்


சாம்ராஜ்நகரில் மகளின் திருமணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு: 5 ஆயிரம் மரக்கன்றுகளையும் வினியோகித்த சமூகஆர்வலர்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:15 AM IST (Updated: 24 Nov 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகரில் மகளின் திருமணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூகஆர்வலர், 5 ஆயிரம் மரக்கன்றுகளையும் வினியோகித்தார்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது மகள் காவேரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். திருமணத்தை மற்றவர்கள் போல நடத்தாமல் சற்று வித்தியாசமாக நடத்த விரும்பினார். தனது மகளின் திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கவும், பிளாஸ்டிக் பொருட்கள் இன்றி திருமணத்தை நடத்தவும் அவர் முடிவு செய்தார்.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியின் மகள் காவேரிக்கு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மா, எலுமிச்சை, சப்போட்டா ஆகிய மரக்கன்றுகளை மணமக்கள் வழங்கினர்.

மேலும் திருமணம் நடைபெற்ற மண்டபத்தில் வழங்கப்பட்ட டீ பிளாஸ்டிக் கப்பில் கொடுக்காமல் சில்வர் டம்ளரில் வழங்கப்பட்டது. இவ்வாறு திருமணம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் நடைபெற்றது. மேலும் திருமணத்தில் கலந்துகொண்டவர்களிடம், கிருஷ்ணமூர்த்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தற்போது காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. காடுகள் அழிக்கப்பட்டு வீடுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் எனது மகளின் திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு இலவசமாக 5 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கவும், பிளாஸ்டிக் பொருட்கள் இன்றி திருமணம் நடத்தவும் முடிவு செய்தேன்.

அதன்படி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினேன். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு எனது மகள் திருமணத்தை நடத்தி உள்ளேன். மேலும் திருமணத்தின் போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்றார்.

Next Story