அம்பத்தூர் எஸ்டேட்டில் தொழில் அதிபர் வெட்டிக்கொலை தப்பி ஓடிய வடமாநில தொழிலாளர்களுக்கு வலைவீச்சு
அம்பத்தூர் எஸ்டேட்டில் தொழில் அதிபரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வடமாநில தொழிலாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை வியாசர்பாடி பெரியார்நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 56). இவருடைய மகன் பிரபாகரன்(27). இவருக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், 4 மாத கைக்குழந்தையும் உள்ளது.
இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள அத்திப்பட்டு பகுதியில் சிறிய அளவிலான கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு பழைய இரும்பு குழாய்களில் துருப்பிடித்து இருந்தால் அவற்றை அகற்றி, மீண்டும் துருபிடிக்காத வகையில் பெயிண்ட் அடித்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். வேலை இருந்தால் மட்டும் கம்பெனியை திறப்பார். இவரிடம் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் வேலை செய்து வந்தனர்.
வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் இரவு நீண்டநேரம் ஆகியும் பிரபாகரன், வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை ஆனந்தன், அம்பத்தூர் எஸ்டேடுக்கு சென்று பார்த்தார்.
அங்கு நிறுவனத்தின் கதவு வெளிப்புறமாக பூட்டி இருந்தது. ஆனால் கதவின் அடிப்பகுதியில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்தன். பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு தனது மகன் பிரபாகரன், தலையில் அரிவாளால் வெட்டியும், முகத்தில் இரும்பு கம்பியால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் ஆகியோர் தலைமையிலான போலீசார், கொலையான பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
வடமாநில தொழிலாளர்கள் ஓட்டம்
அதில், பிரபாகரன் கம்பெனியில் வேலை செய்துவந்த வடமாநில தொழிலாளர்கள் 2 பேரும் மாயமாகி இருந்தனர். பிரபாகரனின் செல்போனையும் காணவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 வாலிபர்கள் பையுடன் தப்பி ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அது பிரபாகரன் கம்பெனியில் வேலை செய்த தொழிலாளர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது.
எனவே வடமாநில தொழிலாளர்கள்தான் பிரபாகரனை கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மதியம் ஒப்பந்ததாரர் ஒருவர் பெயிண்ட் அடிக்கும் பணிக்காக பிரபாகரனிடம் ரூ.1 லட்சம் வரை முன்பணம் கொடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
பணத்துக்காகவா?
இதை பார்த்த வடமாநில தொழிலாளர்கள், அந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக பிரபாகரனை வெட்டிக்கொன்று விட்டு, பணம் மற்றும் அவரது செல்போனை கொள்ளையடித்து சென்றனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு தப்பிச்சென்றனரா? என ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்ற னர்.
Related Tags :
Next Story