18 வயது முடிந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் கலெக்டர் சாந்தா அறிவுறுத்தல்


18 வயது முடிந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் கலெக்டர் சாந்தா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 24 Nov 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

18 வயது முடிந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவுறுத்தி உள்ளார்.

பெரம்பலூர்,

தேர்தல் கல்வியறிவிற்கான மாவட்ட குழுவினரின் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. அப்போது கலெக்டர் சாந்தா பேசுகையில், தேர்தல் நடைமுறைகள் குறித்தும் தேர்தலில் பங்கேற்பது குறித்தும், எதிர்கால வாக்காளர் மற்றும் புதிய வாக்காளர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பள்ளி, கல்லூரி மற்றும் கிராம அளவில் தேர்தல் கல்வி குழுக்கள் அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் பள்ளி அளவிலான குழுக்கள் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை கொண்டும், வாக்குச்சாவடி மைய அளவிலான குழுக்கள் கிராம பொதுமக்களை கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 பள்ளிகளிலும், 35 கல்லூரிகளிலும் மற்றும் அனைத்து கிராமங்களிலும் தேர்தல் கல்வி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் சேர்க்க வேண்டும்

தேர்தல் கல்வி குழுக்கள் செயல்படும் விதம் குறித்தும், அதன் செயல்முறைகள் குறித்தும் கண்காணிக்க தேர்தல் கல்வியறிவிற்கான மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயது முடிவடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். எதிர்கால வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது மிகவும் அவசியம். வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தெய்வநாயகி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) தேவநாதன், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன், தேர்தல் கல்வியறிவு குழு ஒருங்கிணைப்பாளர்கள், தேர்தல் கல்வியறிவிற்கான மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

Next Story