காரைக்குடியில் நெகிழ்ச்சி சம்பவம் வாகனத்தில் அடிபட்ட கன்றுக்குட்டி; தவியாய் தவித்த தாய்ப்பசு


காரைக்குடியில் நெகிழ்ச்சி சம்பவம் வாகனத்தில் அடிபட்ட கன்றுக்குட்டி; தவியாய் தவித்த தாய்ப்பசு
x
தினத்தந்தி 24 Nov 2019 4:00 AM IST (Updated: 24 Nov 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

வாகனத்தில் அடிபட்டு நடக்கமுடியாமல் கிடந்த கன்றுக்குட்டியை சுற்றிசுற்றி தாய்ப்பசு வந்தது. சமூக ஆர்வலர்கள் கன்றுக்குட்டியை தூக்கி சென்ற போது பின்னாலேயே கால்நடை மருத்துவமனை வரை சென்றது.

காரைக்குடி,

காரைக்குடி நகரின் பிரதான சாலையான முடியரசனார் சாலையில் நகராட்சி பூங்கா உள்ளது. இதன் எதிரே ஒரு பசுவும் அதன் கன்றும் நின்று கொண்டிருந்தன. அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் கன்றுக்குட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் காலில் பலத்த காயமடைந்த கன்றுக்குட்டி கீழே விழுந்து எழமுடியாமல் கிடந்தது. இதைக்கண்ட தாய்ப்பசு அதனை சுற்றிசுற்றி வந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது. இந்த சம்பவம் அங்கு பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. அப்போது அவ்வழியாக வந்த அக்னி சிறகுகள் மக்கள் நல சங்க செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது குழுவினர் அந்த விபத்தில் காயமடைந்த கன்றுக்குட்டியை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சைக்காக கன்றுக்குட்டியை கொண்டு செல்லும்போது தாய்ப்பசுவும் பின்னால் கத்திக் கொண்டே சென்றது பார்ப்போரை பரிதாபப்பட வைத்தது.

அபராதம் விதிப்பு

காரைக்குடி நகரில் அனைத்து பகுதி சாலைகளிலும் கால்நடைகள் சுற்றி திரிவதும், இரவு நேரங்களில் சாலைகளிலேயே கூட்டம் கூட்டமாக படுத்திருப்பதும் அன்றாடம் நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் கால்நடைகளும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் இவ்வாறு வீதிகளில் திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து பட்டியில் அடைத்துவிடுவார்கள். அதன்பின் அவைகளின் உரிமையாளர்களை அழைத்து அபராதம் விதித்து அதனை கட்டியபிறகுதான் கால்நடைகளை அழைத்துச் செல்ல அனுமதிப்பார்கள். இனியாவது வீதிகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story