கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறார்கள்: காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க. திடீர் எதிர்ப்பு


கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறார்கள்: காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க. திடீர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Nov 2019 3:45 AM IST (Updated: 24 Nov 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க. திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரசார் கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரி,

புதுவை தெற்கு மாநில தி.மு.க. செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சி.பி.திருநாவுக்கரசு பேசும்போது, காங்கிரஸ் கட்சி தி.மு.க. தலைமையோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு புதுச்சேரி தி.மு.க.வை பழிவாங்குகிறது. கூட்டணி தர்மத்தை மறந்து அவமதித்து வருகிறது. எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது தற்கொலைக்கு சமம். இது குறித்து கட்சி தலைமையிடம் அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதே கருத்தையே துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, விவசாய அணி அமைப்பாளர் சோமு, தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன் ஆகியோர் வலியுறுத்தினார்கள்.

தி.மு.க. நிர்வாகிகளை சமாதானப்படுத்தி தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது. இந்த ஆட்சியில் தி.மு.க.வுக்கு தகுந்த மரியாதை இல்லை என்று நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்தனர். காங்கிரசோடு இனியும் கூட்டணி வைக்கக் கூடாது என்று தங்கள் மனவேதனையை கொட்டி தீர்த்துள்ளனர்.

காங்கிரஸ் அரசு நமக்கு எதுவும் செய்யவில்லை என்பது உண்மைதான். தி.மு.க. போன்று கட்சிக்கென கொள்கை, கோட்பாடு, கட்டுப்பாடுகள் இல்லாத இயக்கம் காங்கிரஸ். அந்த இயக்கத்தில் எம்.எல்.ஏ. ஆனவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் அவரவர் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நாம் மாட்டிக்கொண்டுள்ளோம்.

அதேபோல் இந்த அரசின் செயல்பாடுகள் தி.மு.க.வை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. நல்லாட்சி என்று கூறி நாம் இனி மக்களிடம் வாக்குகேட்க முடியாது. இந்த ஆட்சியை கண்டித்து போராட வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். காங்கிரஸ் கட்சியும், முதல்-அமைச்சரும் தி.மு.க. அமைப்பாளர்களை பிரித்தாளும் நோக்கில்தான் செயல்படுகிறார்கள்.

அந்தநிலை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் 3 அமைப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் தேர்தலில் தி.மு.க.வின் வலிமையை காட்டுவோம். அதற்கு முன்னோட்டமாக புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி போராட்டம் நடத்துவோம். எதிர்வரும் காலம் தி.மு.க.வுக்கானது என்பதை அனைவரும் மனதில் ஏற்று ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

புதுச்சேரியின் நிலவரம் குறித்து ஒவ்வொரு கட்டத்திலும் நமது தலைமை ஆராய்ந்து தான் வருகிறது. கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தான் புதுச்சேரியில் கூட்டணி வைப்பதா? தனித்து போட்டியிடுவதா? என்று முடிவு செய்வார். தலைமை எடுக்கும் முடிவுக்கு செயல்வடிவம் கொடுப்பதே ஒவ்வொரு தி.மு.க. தொண்டனின் கடமையாகும். இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story