புத்தகங்களை படித்து பொதுஅறிவை வளர்த்துக்கொண்டால் போட்டித்தேர்வில் வெற்றிபெறலாம் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை


புத்தகங்களை படித்து பொதுஅறிவை வளர்த்துக்கொண்டால் போட்டித்தேர்வில் வெற்றிபெறலாம் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
x
தினத்தந்தி 24 Nov 2019 4:00 AM IST (Updated: 24 Nov 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

புத்தகங்களை படித்து பொதுஅறிவை வளர்த்துக்கொண்டால் போட்டித் தேர்வில் வெற்றிபெறலாம் என மாணவர்களுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவுரை வழங்கினார்.

கடலூர்,

பொது நூலகத்துறை சார்பில் 52-வது தேசிய நூலக வார விழா கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் பாலசரஸ்வதி வரவேற்று பேசினார்.

விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய புரவலர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வெற்றி வாய்ப்பு

கடலூர் மாவட்ட மைய நூலகம் தலைசிறந்த நூலகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. படிக்கும் பழக்கத்தை ஒவ்வொருவரும் உருவாக்கி கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளாகிய நீங்கள் சிறு வயதில் இருந்தே நூலகங்களுக்கு சென்று தலைவர்களின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் மாணவ பருவத்தில் நூலகங்களுக்கு சென்று படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால்தான் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி வாய்ப்பினை பெற முடியும். அறிவு சார்ந்த பல்வேறு நூல்களை படித்து பொது அறிவை வளர்த்துக்கொண்டால்தான் போட்டி தேர்வில் கலந்து கொண்டு எளிதாக வெற்றி பெறலாம். மாவட்ட மைய நூலகத்தினை பின்பற்றி கிளை நூலகங்களில் அதிகளவில் வாசகர்களை சேர்க்க வேண்டும்.

இணைந்து செயல்பட வேண்டும்

படித்து வேலையில்லாத இளைஞர்கள், மாணவ-மாணவிகளை நூலகத்திற்கு வரவழைத்து பல்வேறு நூல்களை கற்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கிளை நூலகங்கள் மாவட்ட மைய நூலகத்தோடு இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் இளம் வயதிலேயே புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மனிதனை அறிவார்ந்த, திறன்மிக்க, ஒழுக்கம் உள்ள மனிதனாக மாற்றுவது நூலகம். மாணவர்கள் அனைவரும் தங்கள் படிப்போடு பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கு பரிசு

இதைத் தொடர்ந்து இளம்படைப்பாளர் விருதுக்கான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பரிசுகளை வழங்கினார். மேலும் நல்நூலகர் விருதுபெற்ற மா.புடையூர் நூலகர் பெரியசாமி, சிறந்த வாசகர் வட்டத்துக்கான விருதுபெற்ற திட்டக்குடி கிளை நூலக ஆர்வலர் முத்துஜெயராமன் ஆகியோரையும் பாராட்டினார்.

விழாவில் நகரசபை முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் நாராயணன், தமிழ்செல்வம், கந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட மைய நூலகர்(பொறுப்பு) சந்திரபாபு நன்றி கூறினார்.

Next Story