திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சரிவர நடைபெறவில்லை - தி.மு.க.எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகார்


திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சரிவர நடைபெறவில்லை - தி.மு.க.எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகார்
x
தினத்தந்தி 24 Nov 2019 3:58 AM IST (Updated: 24 Nov 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறவில்லை என தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி. (தி.மு.க.)தலைமை தாங்கினார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, ஆரணி வி‌‌ஷ்ணுபிரசாத் எம்.பி.(காங்கிரஸ்) மற்றும் தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), மு.பெ.கிரி (செங்கம்), கே.வி.சேகரன் (போளூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி வரவேற்றார்.

கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் குறித்தும், அந்த பணி எவ்வாறு டெண்டர் விடப்பட்டது என்றும், பெரும்பாலான இடங்களில் குடிமராமத்து பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும் கூறினர். ஏரிகளில் சிலர் மண் எடுத்து தனியார் நிலங்களில் பயன்படுத்துகின்றனர். இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் கூறுகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட்டு பயனாளிகளை தேர்வு செய்து உத்தரவு வழங்க வேண்டும். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு 2 வீடுகள் கட்ட ஆணை வழங்குவதாக புகார்கள் வருகின்றன. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்க வேண்டும். மத்திய அரசின் முத்ரா கடனுதவி திட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கியாளர்கள் முறையாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இது போன்ற ஆய்வு கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயமாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். அவர்களது கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.

பின்னர் சி.என். அண்ணாதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு மத்திய, மாநில அரசு பங்களிப்போடு நடந்த பணிகளின் புள்ளி விவரங்கள் குறித்து தகவல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கும் நிதி குறைவாக உள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து நானும், ஆரணி எம்.பி.யும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். அடுத்த கூட்டத்திற்குள் நல்ல தகவல் கிடைக்கும். தென்பெண்ணையாற்றில் கர்நாடகா அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக நாங்கள் குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story