கோபி அருகே மில் தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்: விறகுகட்டையால் தாக்கி கொன்ற 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்


கோபி அருகே மில் தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்: விறகுகட்டையால் தாக்கி கொன்ற 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:35 AM IST (Updated: 24 Nov 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே மில் தொழிலாளி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை விறகு கட்டையால் தாக்கிக்கொன்றதாக கைதான 2 பேர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடத்தூர்,

புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பம் மணப்பேட் என்ற ஊரை சேர்ந்தவர் குமார் (வயது 55). இவர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே தண்ணீர்பந்தல்புதூரில் உள்ள பேப்பர் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மில்லில் உள்ள அறையிலேயே தங்கியிருந்தார்.

குமார் மட்டும் கடந்த 19-ந் தேதி அன்று இரவு அறையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த மில் காவலாளி உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு வந்து பரிசோதனை செய்ததில் குமார் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்ததும் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குமார் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு்ள்ளது. விசாரணையில் அவருடன் அறையில் தங்கியிருந்த புதுக்கோட்டை முள்ளம்குறிச்சியை சேர்ந்த பிரபு (31), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அரிநாத் (27) ஆகியோர் குமாைர விறகுகட்டையால் தாக்கி கொன்றது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்து பிரபு கூகலூர் கிராம நிர்வாக அதிகாரி முன்பு சரண் அடைந்தார். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் அரிநாத் வெளியூர் செல்ல ஒத்தக்குதிரை பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை பிடித்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

குமார் இறந்தது முதலில் தற்கொலை என வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட பிரபு போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

நான், அரிநாத், குமார் ஆகியோர் ஒரே அறையில் தங்கி வேலை பார்த்து வருகிறோம். சம்பவம் நடந்த கடந்த 19-ந் தேதி அன்று இரவு மில்லில் யாரும் இல்லை. விடுமுறை என்பதால் வீட்டுக்கு சென்றுவிட்டனர். மில்லில் நாங்கள் 3 பேர் மட்டும் இருந்தோம். அப்போது மது அருந்தினோம். இதில் எங்களுக்கு குடிபோதை தலைக்கேறியது.

இந்த நிலையில் குடிபோதையில் இருந்த குமார் என்னுடைய மனைவியை பற்றி தவறாக பேசினார். இதனால் எனக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நான் ஆத்திரம் அடைந்தேன்.

அரிநாத்துடன் சேர்ந்து அருகே கிடந்த விறகு கட்டையை எடுத்து குமாரின் தலையில் அடித்தேன். இதில் அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

உடனே நாங்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பித்து சென்று தலைமறைவாக இருந்து வந்தோம். போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி எங்களை கைது செய்துவிட்டனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் பிரபு கூறியுள்ளார்.

Next Story