இந்தியாவுக்கு வருமாறு கோத்தபய ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுப்பதா? விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்தியாவுக்கு வருமாறு கோத்தபய ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
இந்தியாவுக்கு வருமாறு கோத்தபய ராஜபக்சேவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்ததை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ந.செல்லதுரை, வி.கோ.ஆதவன் உள்பட மாவட்ட செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
இலங்கை அதிபராக தேர்வாகி இருக்கும் கோத்தபய ராஜபக்சேவை, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘பிரதமர் மோடி அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே வருகிற 29-ந்தேதி இந்தியா வருகிறார்’, என்று தெரிவித்துள்ளார்.
வருத்தம் அளிக்கிறது
இந்த அறிவிப்பு தமிழர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு தற்போது அதிபராகியுள்ள கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே, மந்திரி சாமல் ராஜபக்சே ஆகிய 3 பேருக்கும் தொடர்புண்டு.
ராஜபக்சே குடும்பத்துக்கும், இனப்படுகொலைக்கும் உள்ள தொடர்பை மறந்து, சர்வதேச விசாரணை கோரி தமிழர்கள் போராடி வருவதையும் மறந்து முதல் ஆளாக கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழர்கள் எண்ணங்களை உணர்ந்து இந்த நடவடிக்கையை இந்தியா திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story