கணவரின் கொடுமையால் 2 குழந்தைகளில் தாய் தீக் குளித்து தற்கொலை - கீழ்பென்னாத்தூர் அருகே பரிதாபம்
கணவர், மாமனார், மாமியார் கொடுமையால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கீழ்பென்னாத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள எலந்தம்புரவடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் செல்வம் (வயது 35), விவசாயி. இவருக்கும், மதுரை கே.கே.நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பழ வியாபாரம் செய்யும் பெண்ணான பூமாதா என்பவர் மகள் மாலாவுக்கும் (29) கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு தனிஷ்குமார் (4), தனிஷ்கா (2) என்ற குழந்தைகள் உள்ளனர். செல்வத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்து மாலாவிடம் அடிக்கடி தகராறு செய்து உள்ளார். இது குறித்து மாலா அவரது தாய் பூமாதாவிடம் தெரிவித்தார். மாலாவிற்கு அவர் ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்து உள்ளார்.
செல்வத்திற்கு அவரது தந்தை சுப்பிரமணி, தாய் சாந்தகுமாரி ஆகியோர் ஆதரவாக இருந்து கொண்டு மாலாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 22-ந் தேதி செல்வமும், அவரது தாய் சாந்தகுமாரியும் மாலாவிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த மாலா, தாய் பூமாதாவிற்கு போனில் தெரிவித்து இனிமேல் என்னால் வாழவே முடியாது, உயிரோடு இருக்கமாட்டேன் என கதறியவாறு கூறியுள்ளார். அப்போது நானும் அப்பாவும் நேரில் வந்து பேசுவதாக பூமாதா கூறினார்.
ஆனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாலா அன்று இரவே வீட்டிலிருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவர் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாலா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது தாயார் பூமாதா கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவிற்கு காரணமான கணவர் செல்வம், மாமனார் சுப்பிரமணி, மாமியார் சாந்தகுமாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். அதன்பேரில் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரெண்டு அண்ணாதுரை மேற்பார்வையில் சப்–இன்ஸ்பெக்டர் தமிழரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் மாலாவிற்கு திருமணமாகி 5 வருடங்கள் தான் ஆவதால் அவரது சாவு குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story