அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது - முத்தரசன் பேட்டி


அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது - முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2019 4:00 AM IST (Updated: 24 Nov 2019 8:12 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று முத்தரசன் பேட்டி அளித்தார். ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜபாளையம்,

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா கட்சி என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சி சர்வாதிகாரத்தை விரும்புகிற, செயல்படுத்திக் கொண்டிருக்கிற பாசிச கொள்கையில் நம்பிக்கையுடைய கட்சி.

இந்த கட்சி அதிகாரத்தில் இருப்பதால் ஜனநாயகப் படுகொலையை அப்பட்டமாக செய்து வருகிறது. தங்கள் கட்சி ஆட்சி நடத்தாத மாநிலங்களில், பிற கட்சி ஆட்சி நடத்தினால் அந்த ஆட்சியை சதி செய்து கலைப்பது வழக்கம்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்த 17 பேரை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது.

அதேபோல மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரை பதவி விலக செய்து இடைத்தேர்தலில் அதே நபரை பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தி தோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரியும். மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இரவோடு இரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்தி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளனர். இரவோடு இரவாக ஜனநாயகப் படுகொலையை செய்வதற்கு அந்த மாநிலத்தில் உள்ள ஆளுநர் உதவி செய்கிறார். குடியரசு தலைவரும் உதவி செய்கிறார். இதுபோன்ற ஜனநாயக படுகொலை நடப்பது நமது நாட்டின் இறையாண்மைக்கு நல்லதல்ல.

இதை நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கின்றனர். பா.ஜ.க கட்சி சரிந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவு அதைத்தான் வெளிப்படுத்தியது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 122 இடங்களில் தனித்து நின்று வெற்றி பெற்ற பா.ஜ.க. இந்த முறை கூட்டணி அமைத்தும்கூட 105 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது.

நாட்டு மக்கள் பா.ஜ.க.வின் சர்வாதிகாரத்திற்கு, ஜனநாயக படுகொலைக்கு உரிய தண்டனையை உரிய நேரத்தில் வழங்குவார்கள். தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளது. இதேபோல சென்னையில் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மிகவும் மோசமாக உள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் குடிநீர் தரமற்ற முறையில் உள்ளது என மத்திய அரசின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.இவைகளைப் பற்றிஎல்லாம் கவனித்து தீர்வு காணக்கூடிய அரசாக தமிழக அரசு இல்லை.

பால், குடிநீர் மற்றும் பொதுமக்கள் நலன் சேர்ந்த பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு கவலைப்படாமல் இருப்பதால் இதுபோன்ற நிலைமைகள் இருக்கிறது. இவற்றை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் உள்ளாட்சியில் மேயர், தலைவர் இடங்களை அதிகமாக கேட்பதினால் பதவிகள் அவர்களுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக மறைமுக தேர்தலை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

தங்களை தற்காத்துக்கொள்ள தவறான முறையில் ஜனநாயக விரோத முறையில் பணபலம், அதிகார பலத்தை கொண்டு ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் குறுகிய மனப்பான்மையோடு அ.தி.மு.க. அரசு மறைமுக தேர்தலை கொண்டு வந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story