அடகு கடையின் பூட்டை உடைத்து 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அடகு கடையின் பூட்டை உடைத்து 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Nov 2019 4:45 AM IST (Updated: 24 Nov 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே திருவையாறை சேர்ந்தவரின் அடகு கடையின் பூட்டை உடைத்து 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீழப்பழுவூர்,

தஞ்சை மாவட்டம், திருவையாறை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 56). வக்கீலான இவர் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமழப்பாடி கிராமத்தில் உள்ள கீழராஜ வீதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையானது சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவரது தந்தை காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் முதலில் உ‌ஷாராக அலாரத்துக்கு செல்லும் வயரின் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த லாக்கரை தூக்கி மற்றொரு அறையில் வைத்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில் ஒவ்வொரு அடியாக அடித்து லாக்கரை உடைத்து அதில் இருந்த நகைகளை எடுத்துள்ளனர். அப்போது நகைகளை அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும்போதே பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வெளியே வந்துள்ளார்.

கடைக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை பார்த்த அவர் உடனே திருடன், திருடன் என சத்தம்போடவே சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் சிக்கிய நகைகளை மட்டும் கொள்ளையடித்துக்கொண்டு அருகில் இருந்த வயல் வெளிப்புறங்களில் தனித்தனியே பிரிந்து ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு எழுந்து வந்து, சிறிது தூரம் அவர்களை துரத்தி சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் திருமானூர் போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து தகவலறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவக்குமார் கூறுகையில், லாக்கரில் 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் இருந்தன. தற்போது 100 பவுன் தங்க நகைகள் கொள்ளைபோயிருக்கலாம் என்றார். தொடர்ந்து போலீசார் கூறுகையில், கொள்ளையர்கள் லாக்கரை உடைத்து நகைகளை எடுத்துச்சென்று இருப்பதால் லாக்கரை முழுமையாக திறக்க முடியாமல் உள்ளது. முழுமையாக திறந்து பார்த்தால்தான், எத்தனை பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது தெரியவரும்.

இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story