மராட்டியத்தில் அவசர கதியில் புதிய அரசு பதவி ஏற்பு: கையில் அதிகாரம் இருப்பதால் எதையும் செய்யக்கூடாது - பா.ஜ.க. மீது பிரேமலதா விஜயகாந்த் தாக்கு


மராட்டியத்தில் அவசர கதியில் புதிய அரசு பதவி ஏற்பு: கையில் அதிகாரம் இருப்பதால் எதையும் செய்யக்கூடாது - பா.ஜ.க. மீது பிரேமலதா விஜயகாந்த் தாக்கு
x
தினத்தந்தி 24 Nov 2019 10:30 PM GMT (Updated: 24 Nov 2019 7:36 PM GMT)

மராட்டியத்தில் பா.ஜ.க. அரசு பதவி ஏற்றிருப்பது குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது என கூறினார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை உள்ளது என்று மத்திய அரசு கூறி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர், அரசு வினியோகிக்கும் பாலில் கலப்படம் இல்லை. தனியார் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்படும் என கூறி உள்ளார். எது எப்படியோ, மக்கள் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மராட்டியத்தில் இரவோடு இரவாக அவசர கதியில் ஆட்சி அமைத்துள்ளார்கள். அங்கு மிகப்பெரிய குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வமாகவே ஆட்சிக்கு வந்து இருக்கலாம். கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது.

முதலில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கட்டும், அதன் பின்னர் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள், எங்கு போட்டியிடுவது என்பதை முடிவு செய்யலாம். எங்கள் கட்சியில் நாங்கள் குழு அமைத்துள்ளோம். அதன் மூலம் பேசி முடிவு எடுக்கப்படும். மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்பது தி.மு.க. ஆட்சியிலேயே இருந்துள்ளது. ஆகையால் தற்போது அரசு அறிவித்ததில் தவறு இல்லை. ரஜினிகாந்த் சொன்ன அதிசயம், அற்புதம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்களுக்கு தெரியும், யார் நல்லவர்கள் என்று. அவர்கள் மிகச்சரியான நேரத்தில் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ரஜினிகாந்த், கமல்ஹாசன் விவகாரத்தில் ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றது. உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் எங்களது கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு தேவையான இடங்களை நிச்சயமாக நாங்கள் கேட்டுப் பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு விஜயகாந்த் உதாரணமாக இருக்கிறார் என்று சில வாரங்களுக்கு முன்பு தமிழக கைத்தறித்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசியது குறித்து நிருபர்கள் கேட்டபோது, தமிழக அமைச்சரவையில் அப்படி ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் பெயரும் அவருடைய இலாகாவும் எனக்கு தெரியாது என பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்தார். 

Next Story