சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் முன்னாள் ராணுவ வீரரின் உடலை வயல் வரப்பு வழியாக தூக்கி சென்ற அவலம்


சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் முன்னாள் ராணுவ வீரரின் உடலை வயல் வரப்பு வழியாக தூக்கி சென்ற அவலம்
x
தினத்தந்தி 24 Nov 2019 10:30 PM GMT (Updated: 24 Nov 2019 7:50 PM GMT)

வேளாங்கண்ணி அருகே சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் முன்னாள் ராணுவ வீரரின் உடலை வயல் வரப்பு வழியாக தூக்கி சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மேல தன்னிலப்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு என்று சுடுகாடு உள்ளது.

இந்த சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவரின் உடலை வயல் வரப்பு வழியாகவும், ஒத்தையடி பாதை வழியாகவும் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. சுமார் 500 மீட்டர் தூரம் உள்ள சுடுகாட்டுக்கு இறந்தவரின் உடலை தோளில் சுமந்தப்படி சென்று வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் சுடுகாட்டு செல்லும் பாதை சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

முன்னாள் ராணுவ வீரர்

இந்த நிலையில் இதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மணிமாறன் (வயது 52) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சுடுகாட்டுக்கு சாலை வசதி இல்லாததால் அவரது உடலை உறவினர்கள் தோளில் சுமந்து கொண்டு வயல் வரப்பு வழியாக சென்றனர். சுடுகாட்டுக்கு செல்லும் பாதை தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக காணப்பட்டதால் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

மேல தன்னிலப்பாடி கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை ஒத்தையடி பாதையில் எடுத்து செல்கிறோம். பாதை குறுகளாக இருப்பதால், 4 பேர் தூக்கி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இந்த பாதையும் மழையால் சேறும், சகதியுமாக உள்ளதால் உடலை வயல் வரப்பு வழியாகதூக்கி செல்கின்றோம். அப்போது நிலை தடுமாறி கீழே விழும் அவல நிலை உள்ளது.

நடவடிக்கை

சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி செய்து தரக்கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுகொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக மேல தன்னிலப்பாடி கிராம பகுதி மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story