தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் தேங்கி நிற்கும் மழைநீர் சுற்றுலா பயணிகள் அவதி


தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் தேங்கி நிற்கும் மழைநீர் சுற்றுலா பயணிகள் அவதி
x
தினத்தந்தி 25 Nov 2019 4:00 AM IST (Updated: 25 Nov 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் தேங்கி நிற்கும் மழைநீரால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கும்பகோணம்,

தமிழகத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். தற்போது பெய்து வரும் இந்த மழை சம்பா, தாளடி நெற் பயிர்களுக்கும், கரும்பு பயிருக்கும் ஏற்றது என விவசாயிகள் கூறுகிறார்கள்.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கோவிலில் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்தி மண்டபம் உள்பட கோவில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. கலை அம்சங்கள் நிறைந்த கற்சிலைகளை கொண்ட இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

கோவிலின் கலை அழகை கண்டு ரசிக்க உலகம் முழுவதிலும் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கோவிலில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கோவிலை சுற்றி உள்ள அகழியிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால், கோவில் வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

பாசி படிந்துள்ளது

பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் கோவில் பிரகாரத்தில் பாசி படிந்துள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. எனவே மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்த நிலையில் மழைநீர் பல நாட்களாக கோவில் வளாகத்தில் தேங்கி நின்று சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Next Story