நகை பட்டறையின் மேற்கூரையை பிரித்து 10 கிலோ வெள்ளி கட்டிகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நகை பட்டறையின் மேற்கூரையை பிரித்து 10 கிலோ வெள்ளி கட்டிகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Nov 2019 11:00 PM GMT (Updated: 24 Nov 2019 8:04 PM GMT)

மணப்பாறையில், போலீஸ் நிலையம் அருகே உள்ள நகை பட்டறையின் மேற்கூரையை பிரித்து 10 கிலோ வெள்ளி கட்டிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை மலையாண்டித் தெருவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் பட்டறை வைத்து நடத்தி வருபவர் ஆனந்த்(வயது 43). இந்த கடையின் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டது ஆகும். ஆனந்த், நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு பட்டறையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் நேற்று காலை பட்டறையை திறக்க வந்தபோது கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகள் அப்படியே இருந்தன. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது உருக்கி கட்டியாக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ வெள்ளியை காணாதது கண்டு திடுக்கிட்டார். கதவை திறக்காமல் எப்படி வெள்ளி கட்டிகள் திருட்டு போனது என்று யோசித்தபோது பட்டறையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பதை கண்டார். அதன்வழியாக உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. திருட்டு போன வெள்ளி கட்டிகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இந்த திருட்டு குறித்து மணப்பாறை போலீசாருக்கு ஆனந்த் தகவல் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விரல் ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு சம்பவம் நடைபெற்ற இந்த நகை பட்டறை போலீஸ் நிலையத்தின் மற்றொரு புறம் உள்ள சுற்றுச்சுவரின் அருகில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்தான் காட்டுப்பட்டி காமராஜர் நகரில் 65 பவுன் நகைகள் கொள்ளை போனது. மணப்பாறை பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் மேற்பார்வையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story