வேலூர் அருகே, மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் தந்தை அடித்துக்கொலை - உறவினரிடம் போலீசார் விசாரணை


வேலூர் அருகே, மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் தந்தை அடித்துக்கொலை - உறவினரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Nov 2019 4:00 AM IST (Updated: 25 Nov 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே மகளின் மஞ்சள் நீராட்டுவிழாவில் தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அடுக்கம்பாறை,

வேலூரை அடுத்த கம்மசமுத்திரம் மோட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது45) கார் டிரைவர். இவருடைய மகளுக்கு நேற்று மதியம் மஞ்சள் நீராட்டுவிழா நடைபெற்றது. இதற்காக உறவினர்கள் வந்திருந்தனர்.

மோகன்ராஜின் மனைவி ரோசியின் அண்ணன் சதுப்பேரியை சேர்ந்த ஜோசப் (54) என்பவரும் குடும்பத்தினருடன் வந்திருந்தார். மதியம் விழா முடிந்தது. மாலையில் உறவினர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மோகன்ராஜ், குடிபோதையில், ஜோசப் மற்றும் அவருடைய குடும்பத்தினரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை ஜோசப் தட்டிக்கேட்டுள்ளார், மேலும் விறகுக்கட்டையால் மோகன்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கீழேவிழுந்த மோகன்ராஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மோகன்ராஜை பரிசோதனை செய்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சென்று மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி மோகன்ராஜின் மனைவி ரோசி வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப்பிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story