நாடாளுமன்ற தேர்தலின்போது ஈரோடு மக்களை விட்டு சென்றது தவறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருத்தம்


நாடாளுமன்ற தேர்தலின்போது ஈரோடு மக்களை விட்டு சென்றது தவறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருத்தம்
x
தினத்தந்தி 24 Nov 2019 11:00 PM GMT (Updated: 24 Nov 2019 9:35 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலின்போது ஈரோடு மக்களை விட்டு சென்றது தவறு என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசு பொருளாதார பேரழிவை ஏற்படுத்தி இருப்பதை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர் முன்னிைல வகித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

அதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘தேனி தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தோல்வி அடையவில்லை, அங்குள்ள மக்கள் தான் தோற்றுவிட்டனர். வெற்றி பெற்றவர் எவ்வளவு பணத்தை வாரி இறைத்தார் என்பதை நாடே அறியும். இந்தியாவின் பொருளாதாரமும், அன்னிய முதலீடும் சரிந்துவிட்டது. இதை உலக மற்றும் இந்திய பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள். புதிய தொழிற்சாலைகள் இல்லை. விவசாயம் மங்கிவிட்டது. வேலையின்மை அதிகரித்து விட்டது. பிரதமர் மோடியின் அரசு படுபாதாளத்தை நோக்கி சென்றுவிட்டது’ என்றார்.

ஈரோடு மக்களை...

ஆர்ப்பாட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலின்போது, ஈரோடு தொகுதி கிடைக்கவில்லை என்றதும் நான் அமைதியாக இருந்து இருக்க வேண்டும். பதவி ஆசையால் தேனி தொகுதியில் சென்று போட்டியிட்டேன். அங்கு வாக்குக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்து ரூ.200 கோடி செலவு செய்து, அவர்கள் வெற்றி பெற்று விட்டனர். ஈரோடு மக்களை விட்டு சென்றதை தவறு என்று உணர்கிறேன்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடி, தற்போது மராட்டியத்தின் ஜனநாயகத்தையும் சீர்குலைத்துவிட்டார். மராட்டியத்தில் ஆட்சி அமைந்து விட்டது என்று பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், அந்த மாநில மக்களால் தான் 2 பேருக்கும் முடிவு வரும். ஜனநாயகத்தை கொலை செய்துவிட்டு மராட்டியத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது. நாட்டில் ஜனநாயகம் இருக்கக் கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். நாட்டின் முடிசூடா மன்னனாக மோடி வர வேண்டும் என நினைக்கின்றனர்.

பயம்

ஹிட்லரை போன்ற நிலை பிரதமர் மோடிக்கு வரும் என்று நான் சொல்லவில்லை. அதேநேரத்தில் ஹிட்லரின் வரலாற்றை அவர் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லவே விரும்புகிறேன். காஷ்மீரில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. எல்லோருக்கும் மோடி என்றால் பயம். எல்லா நாட்களிலும் அவர்கள் மக்களை ஏமாற்ற முடியாது. இறுதிவரை தொண்டர்களாகிய உங்களோடு நான் இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஈ.பி.ரவி, மக்கள் ராஜன், எஸ்.வி.சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.மாரியப்பன், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் ராஜப்பா, சிறுபான்மைப்பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பாட்ஷா, சத்தி நகர தலைவர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story