உளிமாவு ஏரியில் திடீர் உடைப்பு 2 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


உளிமாவு ஏரியில் திடீர் உடைப்பு 2 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 25 Nov 2019 6:00 AM IST (Updated: 25 Nov 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

குழாய் பதிக்கும் பணிகள் நடந்த போது உளிமாவு ஏரி உடைந்தது. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சாலைகள் மூழ்கியதுடன், வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு பன்னரகட்டா அருகே உளிமாவு ஏரி உள்ளது. இந்த ஏரி 124 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். பெங்களூருவில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்த நிலையில், ஏரியை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை பெங்களூரு வளர்ச்சி ஆணையம் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கரைப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்தது. அதன்படி, நேற்று காலையில் ஏரிப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிகளில் ஊழியர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். குழாய் பதிப்பதற்காக அங்கு பொக்லைன் வாகனம் மூலம் மண் அள்ளப்பட்டது.

மேலும் ஏரியில் கிடந்த தண்ணீரை வேறு பகுதிக்கு திருப்பி விடும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென்று ஏரியின் ஒருப்பகுதியின் கரை உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வெளியேறி ஓடியது. உடனடியாக உடைப்பை சரி செய்ய ஊழியர்கள், தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால் ஏரியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால் அவர்களால் உடைப்பை சரி செய்ய முடியாமல் போனது.

இதன் காரணமாக ஏரியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறியது. அவ்வாறு பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் உளிமாவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கிருஷ்ணா லே-அவுட், சாந்தினி கேதனா, பேங்க் காலனி, சரஸ்வதிபுரா, விஜயா பாங்க் லே-அவுட், தியோ லே-அவுட், ராகவேந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்தது. ஏரிப்பகுதியில் உள்ள ராஜ கால்வாய்களிலும் நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இதனால் உளிமாவு, கிருஷ்ணா லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

மேலும் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் முன்பாக முட்டளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. அத்துடன் உளிமாவை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கியது. அந்த சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தண்ணீரில் மூழ்கின. கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசிப்பவர்கள் செய்வது அறியாமல் திகைத்தனர். வீடுகளுக்குள் இருந்த பொருட்களும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நின்றதால், அங்கு வசித்தவர்கள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர். இதுபற்றி அறிந்ததும் மாநகராட்சி மேயர், கமிஷனர், கவுன்சிலர்கள், உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். மேலும் மீட்பு பணியை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் ஏரியில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றது.

இதற்கிடையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு சிக்கி தவிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரப்பர் படகுகள் மூலமாக வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் அனைத்து மக்களையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். மீட்பு பணிகள் நள்ளிரவு வரை நீடித்தது.

தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும்படியும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கமிஷனர் அனில்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், உளிமாவு, கிருஷ்ணா லே-அவுட் பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கியதால், அங்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக நியாப்பனஹள்ளி மற்றும் உளிமாவு இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஏரியின் கரைப்பகுதியில் குழாய் பதிப்பதற்காக நடந்த பணிகளை அதிகாரிகள் அலட்சியமாக மேற்கொண்டதாகவும், இதனால் தான் ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

அத்துடன் ஏரியை தூர்வாருவதற்காக, அங்கிருந்து சிறிதளவு தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்ற முயன்றதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் தான் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் உளிமாவு ஏரியின் கரை உடைந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசிப்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

Next Story