1½ ஆண்டாக அலைக்கழிப்பு: ஸ்கூட்டர் கேட்டு 6 முறை மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்


1½ ஆண்டாக அலைக்கழிப்பு: ஸ்கூட்டர் கேட்டு 6 முறை மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்
x
தினத்தந்தி 25 Nov 2019 10:45 PM GMT (Updated: 25 Nov 2019 7:19 PM GMT)

தஞ்சையில் ஸ்கூட்டர் கேட்டு 6 முறை மனு கொடுத்த மாற்றுத்திறனாளி 1½ ஆண்டாக அலைக்கழிக்கப்படுகிறார். அவரை சக்கர நாற்காலியில் வைத்து 2 கி.மீட்டர் தூரம் கணவர் தள்ளி கொண்டு வந்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்தி. டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி குமுதா(வயது29). மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு அகிலாண்டேஸ்வரி(4), சரவணன்(2) என 2 குழந்தைகள் உள்ளனர். குமுதா பிறவிலேயே கால் வலுவிழந்து நடக்க முடியாமல் உள்ளார். இவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். அதுவும் தானாக சக்கர நாற்காலியில் செல்ல முடியாது.

யாராவது தள்ளி கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குமுதாவால் தனியாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. ஸ்கூட்டர் வழங்க வேண்டும் என கடந்த 1½ ஆண்டாக குமுதா அலைந்து கொண்டு இருக்கிறார்.

6-வது முறையாக மனு

இந்தநிலையில் 6-வது முறையாக மனு அளிப்பதற்காக குமுதா, மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியில் வந்தார். தனது 2 குழந்தைகளையும் மடியில் வைத்து கொள்ள அவரது கணவர் தள்ளி கொண்டு வந்தார். தனது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வண்டியிலேயே வந்த இவர்கள் கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து குமுதா கூறும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் கேட்டு கடந்த 1½ ஆண்டில் 6 முறை மனு அளித்துவிட்டேன். தற்போது நான் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறேன். சக்கர நாற்காலியுடன் செல்வதால் பஸ்சில் கூட ஏற்றி செல்ல மறுத்துவிடுகின்றனர். வீட்டில் இருந்து கடைக்கு சென்று காய்கறிகள் வாங்க கூட யாரையாவது எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

கண்ணீர் மல்க

எனது வீட்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும். ஒவ்வொரு முறையும் மனு கொடுக்க வரும்போது எனது கணவர், என்னை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி கொண்டே வருகிறார். இதனால் அவரால் வேலைக்கு கூட சரியாக செல்ல முடியவில்லை. எனக்கு ஸ்கூட்டர் வழங்கினால் எனது தேவையை நானே பார்த்து கொள்வேன். ஆனால் யாரிடம் தெரிவித்தாலும் கூலிவேலை பார்க்கும் உங்களுக்கு ஸ்கூட்டர் வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதிய கலெக்டர் மூலம் இதற்கு தீர்வு ஏற்படும் என நினைக்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

Next Story