மாமல்லபுரம் கடற்கரை கோவிலை கண்டுகளிக்க கட்டுப்பாடு


மாமல்லபுரம் கடற்கரை கோவிலை கண்டுகளிக்க கட்டுப்பாடு
x
தினத்தந்தி 25 Nov 2019 10:45 PM GMT (Updated: 25 Nov 2019 7:27 PM GMT)

மாமல்லபுரம் கடற்கரை கோவிலை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 15 அடி தூரத்தில் இருந்து கண்டுகளிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில் உலக அளவில் யுனெஸ்கோவல் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகை தந்த காரணத்தால் கடற்கரை கோவிலில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேரத்தில் கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் பார்வையாளர் நேரம் 6 மணி வரை இருந்ததை இரவு 9 மணி வரை தொல்லியல் துறை நீட்டிப்பு செய்தது. இதனால் நாள்தோறும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

தற்போது மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடற்கரை கோவிலின் உள்பகுதியில் சென்று கண்டுகளிக்க தடைவிதிக்கப்பட்டு, கடற்கரை கோவிலின் வடக்கு பகுதியில் நடைபாதை வரை கோவிலுக்கு முன்புறம் கயிறு கட்டப்பட்டுள்ளது.

15 அடி தூரத்தில் இருந்தே இனி சுற்றுலா பயணிகள் இந்த கோவிலை கண்டுகளிக்க முடியும். கோவிலின் உள்பகுதியில் இரவு நேரங்களில் சென்று அங்குள்ள சாமி சிலைகள், நந்தி உள்ளிட்ட சிற்பங்களை கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகளிடம் பின்பக்க கடற்கரை வழியாக கோவிலுக்குள் கம்பி வேலியை தாண்டி ஊடுருவும் சமூக விரோதிகள் சமீப காலமாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவதாகவும், காதல் ஜோடிகள் இருள் சூழ்ந்த பகுதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

போதை வாலிபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில் பயணிகள் மற்றும் கோவிலின் பாதுகாப்பு கருதி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இனி 15 அடி தூரத்தில் இருந்தே கடற்கரை கோவிலை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து செல்பி, புகைப்படம் எடுக்கலாம் என்று தொல்லியல் துறை கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

கடற்கரை கோவிலுக்குள் சமூக விரோதிகள், காதல் ஜோடிகள் இரவு நேரத்தில் உட்புகாத வண்ணம் 10-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த பாதுகாவலர்களை தொல்லியல் துறை பணியில் அமர்த்தி உள்ளது. அவர்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பகல் நேரத்தில் இந்த பாதுகாவலர்களுக்கு ஓய்வு அளிக்கவும் தொல்லியல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story