நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: தடையை மீறி போராட்டம் நடத்திய த.ம.மு.க.வினர்-போலீசார் தள்ளுமுள்ளு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட த.ம.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி, மனு கொடுக்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அனைவரையும் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதித்தனர். அதுவும் பிரதான நுழைவு வாசல் வழியாக செல்ல விடாமல், பழைய கலெக்டர் அலுவலக வாசல் வழியாக அனுப்பினர்.
இந்தநிலையில் காலை 11 மணி அளவில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில துணை பொதுச் செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர், நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மகளிர் அணி நளினி உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலக வடக்கு பகுதியில் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாசல் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் போலீசார் இரும்பு தடுப்புகளை கொண்டு வழியை அடைத்து முன்னேறிச்செல்ல தடை விதித்தனர். ஆனால், தடையை மீறி போராட்டம் நடத்திய கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நடுவே இருந்த இரும்பு தடுப்புகளை தூக்கி விட்டு கட்சியினர் முன்னேறினர்.
இதையடுத்து அவர்களை கைது செய்வதற்காக வேனில் ஏற்ற போலீசார் முயற்சி செய்தனர். ஆனால், அதற்கும் கட்சியினர் உடன்படாமல் கொக்கிரகுளம் மெயின் ரோட்டில் ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாசல் முன்பு சென்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் சிலர், அலுவலகத்துக்கு உள்ளே சென்று கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், வாதிரியார், தேவேந்திர குலத்தான் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று தமிழக அரசு அறிவித்து, சான்றிதழ் கிடைக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் சாதி பிரிவில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினர் என்ற புதிய பிரிவை உருவாக்கி மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இதை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு, கருப்பு கொடி ஏற்றுதல் போன்ற போராட்டங்களை நடத்தி வருகிறோம். தற்போது கருப்பு சட்டை அணிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எனவே, தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்திருந்தனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story