நடைபயிற்சி சென்ற ஊரக வளர்ச்சி துறை அலுவலக ஊழியர் கார் மோதி பலி போலீசார் விசாரணை


நடைபயிற்சி சென்ற ஊரக வளர்ச்சி துறை அலுவலக ஊழியர் கார் மோதி பலி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Nov 2019 3:45 AM IST (Updated: 26 Nov 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

நடைபயிற்சி சென்ற ஊரக வளர்ச்சி துறை அலுவலக ஊழியர் கார் மோதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மூலிமங்கலம் பிரிவு வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 34). இவர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் கணினி பிரிவில் தொகுப்பு ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதேபோல நேற்று காலை கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று பிரபுவின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பிரபுவிற்கு திருமணமாகி தவமணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story