கோவில்பட்டி யூனியனுடன் இளையரசனேந்தல் பிர்காவை சேர்க்கக்கோரி - விவசாயிகள் நூதன போராட்டம்
கோவில்பட்டி யூனியனுடன் இளையரசனேந்தல் பிர்காவை சேர்க்கக்கோரி, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, மாநில பொதுச்செயலாளர் பரமேசுவரன் உள்ளிட்ட விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், குடங்களில் தாமிரபரணி ஆற்று நீரை எடுத்து வந்து, அந்த தண்ணீரை வேப்பிலை மூலம் உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தெளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 வருவாய் கிராமங்களும் கடந்த 1-5-2008 அன்று தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இதன் மூலம் அந்த கிராமங்களின் வருவாய் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை, நீதிமன்றம், சுகாதார துறை உள்ளிட்ட துறைகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. எனினும் அந்த வருவாய் கிராமங்களின் தொடக்க கல்வி, மின்சார துறை போன்றவை தொடர்ந்து குருவிகுளம் யூனியனிலே செயல்பட்டு வருகிறது.
தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்துடன் குருவிகுளம் யூனியன் இணைக்கப்பட்டு உள்ளது. எனவே விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைத்து, அனைத்து துறைகளையும் தூத்துக்குடி மாவட்டத்துடன் முழுமையாக சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் விஜயா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story