சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேர் படுகொலை - உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசி சென்ற கும்பலுக்கு வலைவீச்சு
சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசி சென்ற கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
சிவகாசி,
சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் உள்ள அண்ணாநகரைச் சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 33). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு சத்யா என்ற மனைவியும், மகேஸ்வரன் (8) என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வீட்டில் இருந்து சென்ற அர்ஜூன் இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை சிவகாசி காரனேசன் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொது கழிப்பிடத்தின் அருகில் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அர்ஜூன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அர்ஜூன் உடல் அருகே அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் கிடந்துள்ளது. இதனால் அர்ஜூன் இருசக்கர வாகனத்தில் வரும் போது அவரை எதிரிகள் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சிவகாசி விவேகாந்தர் காலனியை சேர்ந்த முருகன் (32) என்ற சுமை தூக்கும் தொழிலாளியும் நேற்று அதிகாலை நேரு காலனியில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த கிழக்கு போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொழிலாளி முருகனுக்கு சுதா என்ற மனைவியும், நாகராஜ் (12), நாகபாலா (8) என்ற குழந்தைகள் உள்ளனர்.
சிவகாசியில் அடுத்தடுத்து 2 சுமை தூக்கும் தொழிலாளர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் நகர் முழுவதும் காலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இந்த கொலைச் சம்பவங்கள் நடந்து இருப்பதால் 2 சுமை தூக்கும் தொழிலாளர்களையும் ஒரே கும்பல் வெட்டி படுகொலை செய்து விட்டு உடலை வேறு, வேறு பகுதியில் வீசி சென்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மேலும் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் கிடக்கிறது என்று தகவல் வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பல்வேறு இடங்களில் இது குறித்து விசாரித்தனர். பின்னர் அது புரளி என தெரியவந்தது.
ஒரே நேரத்தில் 2 சுமை தூக்கும் தொழிலாளர்களை வெட்டி கொலை செய்ய காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து விருதுநகரில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
ராக்கி, சுமை தூக்கும் தொழிலாளி அர்ஜூன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து முருகன் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு ஓடி சென்று பின்னர் அங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பொட்டல் அருகில் படுத்துக்கொண்டது.
இதை குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிலரிடம் விசாரணையை தொடர்ந்தனர். இந்த கொலை சம்பவம் தொழில் போட்டியால் நடந்ததா, கொடுக்கல்- வாங்கல் விவகாரத்தில் நடந்ததா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இரண்டு கொலை களையும் ஒரே கும்பல் செய்து இருந்தாலும், உடல்கள் வேறு, வேறு பகுதியில் கிடந்ததால் சிவகாசி டவுன், சிவகாசி கிழக்கு போலீசார் தனித்தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story