நெய்வேலி வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெண்ணை கற்பழித்துவிட்டு நடந்த தகராறில் கொன்றது அம்பலம்
நெய்வேலி வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெண்ணை கற்பழித்து விட்டு நடந்த தகராறில் கொன்ற நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கொல்லிருப்பு காலனி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் முனியன். இவரது மகன் பிரகாஷ் (வயது 25). இவர் கடந்த 23-ந்தேதி இரவு, அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் கார்த்திக்(23), சின்னையன் மகன் ராஜதுரை(25), முத்துசாமி மகன் சதிஷ்குமார்(23), ஆறுமுகம் மகன் சிவபாலன்(22) ஆகியோருடன் மது அருந்துவதற்காக நெய்வேலி 2-ம் அனல்மின் நிலையம் அருகே உள்ள சாம்பல் ஏரிக்கு சென்றார். அங்கு 5 பேரும் மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் கார்த்திக், சதிஷ்குமார், ராஜதுரை ஆகியோர் நெற்றியில் பலத்த காயத்துடன் பிரகாசை மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி தெர்மல் போலீசார் விரைந்து சென்று பிரகாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து முனியன் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் கார்த்திக், ராஜதுரை, சதிஷ்குமார் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவர்கள், மது அருந்தியபோது மர்மநபர்கள் வந்ததாகவும், அவர்கள் பிரகாசை சரமாரியாக தாக்கி கொன்று விட்டதாகவும் கூறினர். பின்னர் 3 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஊ.மங்கலம் அருகே உள்ள புதுதெற்குவெள்ளூர் பகுதியை சேர்ந்த 31 வயது விதவை பெண் ஒருவர், நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 23-ந் தேதி எனது உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வடலூரில் இருந்து நெய்வேலி வழியாக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கொல்லிருப்பு காலனியை சேர்ந்த கார்த்திக், சதிஷ்குமார், ராஜதுரை, பிரகாஷ், சிவபாலன் ஆகிய 5 பேர் எங்களை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் என்னுடன் வந்தவரை மிரட்டி துரத்தி விட்டு, என்னை அருகில் உள்ள தோட்டத்துக்குள் தூக்கிச்சென்றனர். அங்கு 5 பேரும் மாறி, மாறி கற்பழித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள், சாம்பல் ஏரி அருகே தூக்கி சென்று மீண்டும் என்னை கற்பழித்தனர்.
இதையடுத்து என்னை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து செல்வது தொடர்பாக அவர்கள் 5 பேருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர் இது தகராறாக மாறி கார்த்திக் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து பிரகாசை தாக்கினர். இதனால் பதறிப்போன நான், அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கார்த்திக் உள்ளிட்ட 3 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பிரகாசை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் மது அருந்தியபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மிரட்டி துரத்திவிட்டு, அவருடன் வந்த புதுதெற்குவெள்ளூரை சேர்ந்த பெண்ணை கற்பழித்தோம். பின்னர் அந்த பெண்ணை வீட்டில் கொண்டு விடுவது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நாங்கள் 4 பேரும் சேர்ந்து பிரகாசை அடித்துக்கொலை செய்தோம். பின்னர் சிவபாலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கொலையை மறைப்பதற்காக, பிரகாசை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி நாடகமாடினோம். ஆனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணே நேரில் வந்து புகார் கூறியதால் போலீசில் சிக்கிக்கொண்டோம். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த சிவபாலனையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story