நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் கட்டுமான பணி: 250 அடி உயர பாய்லரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் கட்டுமான பணி: 250 அடி உயர பாய்லரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 25 Nov 2019 10:15 PM GMT (Updated: 25 Nov 2019 9:43 PM GMT)

நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் கட்டுமான பணியின் போது 250 அடி உயர பாய்லரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி, 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் புதிய அனல் மின்நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு தனியார் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 250 அடி உயரம் கொண்ட பாய்லர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் நெய்வேலி அருகே பெரியகாப்பான் குளத்தை சேர்ந்த குமரவேல் மகன் செல்வக்குமார் (வயது 20) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். இந்நிலையில் மதியம் அவர் பாய்லரின் மேற் பகுதியில் 250 அடி உயரத்தில் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பாய்லரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்வக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவமனைக்கு விரைந்து வந்து, அங்கிருந்த அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த நிலையில், இறந்த செல்வக்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அப்போது தான் அவரது உடலை பெற்றுச் செல்வோம் என்று கிராம மக்கள் மற்றும் பா.ம.க.வினர் தெரிவித்தனர்.

இதையடுத்து பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர்கள் அசோக்குமார், முத்துக்கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் முத்து வைத்திலிங்கம், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன், பெரியகாப்பான்குளம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் சஞ்சீவிராயர், ரங்கநாதன், இளைஞரணி மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் சண்முகவேல், ராஜேந்திரன் ஆகியோர் என்.எல்.சி. மனித வளத்துறை முதன்மை பொது மேலாளர் ஞானசேகரன், முதன்மை பொது மேலாளர் ரகுராமன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், என்.எல்.சி. நிர்வாகம் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பா.ம.க. மற்றும் செல்வக்குமாரின் உறவினர்கள் புதிய அனல்மின்நிலையம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் டவுன்ஷிப் ஆறுமுகம், வடலூர் ரவிந்திரராஜ் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் தான் உடலை பெற்று செல்வோம் என்று கூறி போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் அனல்மின்நிலைய நுழைவு வாயில் அருகிலேயே இரவு முழுவதும் திரண்டு நின்றதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக கிராம மக்களை ஒன்று திரட்டி அனல்மின்நிலையத்துக்கு நாளை(அதாவது இன்று) வேலைக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்து இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story