கரூரில் இருந்து கடத்தப்பட்ட லாரி காங்கேயத்தில் மீட்பு - தப்பி ஓடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடுகிறார்கள்


கரூரில் இருந்து கடத்தப்பட்ட லாரி காங்கேயத்தில் மீட்பு - தப்பி ஓடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடுகிறார்கள்
x
தினத்தந்தி 26 Nov 2019 4:15 AM IST (Updated: 26 Nov 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் இருந்து கடத்தப்பட்ட லாரி காங்கேயத்தில் மீட்கப்பட்டது. தப்பி ஓடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

காங்கேயம்,

கரூர் அருகேயுள்ள வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய டிப்பர் லாரியை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு வேளையில் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவியில் இருந்து லாரி சென்று கொண்டிருந்த தகவல் செல்போனில் தெரிந்தது. இதை தொடர்ந்து டிரைவரை செல்போனில் அழைத்து லாரியை எங்கேயாவது ஓட்டி கொண்டு செல்கிறாயா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு லாரி டிரைவர், நான் லாரியை ஓட்டவில்லை. நான் தூங்கி கொண்டு இருக்கிறேன் என்று பதில் கூறியுள்ளார். இதனால் யாரோ மர்ம ஆசாமி தன்னுடைய லாரியை கடத்தி செல்வது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து ரவிசந்திரன் கரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து போலீசார் அக்கம், பக்கத்து போலீஸ் நிலையங்களுக்கு லாரி கடத்தப்பட்ட தகவலை தெரிவித்தனர். இதையடுத்து காங்கேயம் போலீசாரும் உஷாரானார்கள்.

காங்கேயம்-கரூர் ரோட்டில் முத்தூர் பிரிவில் நள்ளிரவு 1 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கடத்தி செல்லப்படும் லாரி தங்களை கடந்து சென்று விட்டதை அறிந்து காங்கேயம் பஸ்நிலையம் அருகே இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு லாரியை மடக்குமாறு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு விரைந்து சென்றனர்.

அந்த லாரி காங்கேயம் நகரில் திருப்பூர் சாலையில் சென்ற போது ஒரு வங்கி அருகே லாரியை ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர்.அப்போது போலீசாரை கண்டதும் லாரியை கடத்தி சென்ற மர்ம ஆசாமி லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். காங்கேயத்தில் நள்ளிரவில் கடத்தி செல்லப்பட்ட லாரியை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து லாரி உரிமையாளர் ரவிசந்திரன், அதற்கான ஆவணங்களை காண்பித்து லாரியை மீட்டு சென்றார். லாரியை கடத்தி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story