சித்தோடு அருகே, விளை நிலங்கள் வழியாக குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு - மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
சித்தோடு அருகே விளை நிலங்கள் வழியாக குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் மயில் துரையன், தொழிற்சங்க செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் ராமு மற்றும் கட்சியினர் கருப்பு சட்டைகளை அணிந்து வந்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் சான்றிதழ் பெறுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் சாதி பிரிவில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினர் என்ற புதிய பிரிவில் கொண்டுவந்து இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே எங்களுடைய கோரிக்கையை அரசு ஏற்கும் வரை கருப்பு சட்டை அணிவது என்று தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் கடந்த 15 நாட்களாக ஈடுபட்டு வருகிறோம். எனவே குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் உள்ளிட்ட உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அரசு ஆணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
சென்னிமலை ஒட்டப்பாறை பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் கொடுத்த மனுவில், “சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மட்டபாறை ஊராட்சிக்கு உள்பட்ட 1, 2-வது வார்டுகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.
சித்தோடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
சித்தோடு அருகே நல்லாகவுண்டன்பாளையத்தில் எங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளன. அங்கு கடந்த 18-ந் தேதி பொதுப்பணித்துறை நீர்வளத்துறை பொறியாளர்கள் அளவீடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் சென்று கேட்டபோது, சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து அவினாசி வரை சுமார் 7 அடி விட்டமுடைய குடிநீர் குழாய் பதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டபோது பெரும்பாலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. எனவே விளை நிலங்கள் வழியாக குடிநீர் குழாய் அமைக்காமல், தேசிய நெடுஞ்சாலை ஓரமாக குழாய் பதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர் ஏ.எம்.அலெக்சாண்டர் கொடுத்த மனுவில், “பெருந்துறை அருகே பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட அண்ணா காலனியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அங்கு கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பகுதியில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறியிருந்தார்.
நம்பியூர் அருகே அலிங்கியம் பழனிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
எங்கள் பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அங்கு கடந்த 2014-ம் ஆண்டு கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கான பணியில் ஒருவர் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும், கிராம நிர்வாக அதிகாரியும் விசாரணை நடத்தி, ஆலயம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினார்கள். இந்தநிலையில் கிறிஸ்தவ ஆலயம் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேட்டால், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதாக கூறுகிறார்கள். எனவே பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் பகுதியில் ஆலயம் கட்டுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், “தமிழக அரசு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் தமிழகத்தில் 80 வகையான தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது. பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் சுமார் 350 பேருக்கு ஊதியம் குறைவாக கொடுக்கப்படுகிறது. 12 ஆண்டுகள் வரை பணியாற்றியும் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.300 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அரசின் உத்தரவின்படி அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.
உழவன் மகன் விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், “ஈரோடு பகுதியில் சாய, சலவை பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக கடந்த 2015-ம் ஆண்டு ரூ.700 கோடி செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக காவிரி ஆற்றுக்கும், காலிங்கராயன் வாய்க்காலுக்கும் இடைபட்ட பகுதி தேர்வு செய்யப்பட்டது. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வேறு இடத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 391 மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில், அரசுத்துறை பணியாற்றி இறந்த 2 பேரின் வாரிசுதாரர்களுக்கு வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றுவதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா வழங்கினார். மேலும் அவர், உலக சிக்கன தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தினேஷ் (பொது), விஜய்ராஜ்குமார் (சிறுசேமிப்பு) மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story