சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, பர்கூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,907 பேர் கைது


சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, பர்கூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,907 பேர் கைது
x
தினத்தந்தி 26 Nov 2019 4:00 AM IST (Updated: 26 Nov 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு கூலி வழங்கக்கோரி சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி மற்றும் பர்கூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,907 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு, 

சத்தியமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சதுமுகை, சிக்கரசம்பாளையம், உக்கரம், ராஜன் நகர், கொமராபாளையம், இக்கரை நெகமம், புதுபீர்கடவு உள்பட 15 கிராம ஊராட்சிகளில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் ஏராளமான தொழிலாளர்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே கூடினார்கள். பின்னர் அங்கிருந்து 100 நாட்கள் வேலைவாய்ப்பு சங்க தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நடராஜ், ஸ்டாலின் சிவக்குமார், சரவணன், முருகன் ஆகியோருடன் தொழிலாளர்கள் அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்தில் சென்றவர்கள் கூலியை உடனே வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியபடி சென்றனர். ஊர்வலம் சத்தியமங்கலம்- கோவை ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சென்றடைந்ததும், தொழிலாளர்கள் அனைவரும் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரமும் அங்கு வந்தார்.

இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களுடன் சத்தியமங்கலம் தாசில்தார் கணேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மைதிலி, வட்டார வளர்ச்சி அதிகாரி அப்துல்வஹாப், துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிலாளர்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘வருகிற 29-ந் தேதிக்குள் அனைவருக்கும் கூலி வழங்கப்படும்,’ என்றார்.

ஆனால் தொழிலாளர்கள் இதை ஏற்க மறுத்ததுடன், எங்களுக்கு உடனடியாக கூலி வழங்க வேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு போகமாட்டோம்,’ என்றனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டதாக 661 பெண்கள் உள்பட 747 தொழிலாளர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக சத்தியமங்கலம்- கோவை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல்தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்213 பேரையும், அந்தியூர்- மைசூர் ரோட்டில போராட்டம் நடத்திய 70 பேரையும், பவானிசாகரில் 877 பேரையும் சேர்த்து மொத்தம் 1,907 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story