சிவகங்கை மாவட்டத்திற்கு வைகை தண்ணீர் திறக்ககோரி, மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய விவசாயிகள்


சிவகங்கை மாவட்டத்திற்கு வைகை தண்ணீர் திறக்ககோரி, மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய விவசாயிகள்
x
தினத்தந்தி 26 Nov 2019 3:45 AM IST (Updated: 26 Nov 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் குடும்பத்தினருடன் மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து நாளை முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

மதுரை, 

சிவகங்கை மாவட்டத்திற்கு முல்லை பெரியாறு ஐந்து பிரதான கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரின் மூலமாக 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சார்பில் தண்ணீர் திறக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் முறையிடப்பட்டது. அதை தொடர்ந்து முல்லை பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்து தண்ணீர் திறக்கப்பட்டது. 14நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் திடீரென முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது. இதனால் பயிர்கள் நாற்று நடப்பட்ட நிலையில் தண்ணீரின்றி கருக தொடங்கியுள்ளது.

தங்களுக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை வைகையில் திறந்துவிட கோரி சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குடும்பத்தினருடன் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுப்பணித்துறை அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, பெரியாறு கால்வாயிலிருந்து 150 கன அடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில் மேலூர் டிவிஷன், சிவகங்கை டிவிஷன் என தனியாக பிரிக்க வேண்டும் என்றனர்.

மேலும் பொதுப்பணித்துறை சிவகங்கை மாவட்ட விவசாயிகளை புறக்கணிப்பதாகவும், அண்டை மாநில விவசாயிகளை போல பாரபட்சம் காட்டுகிறார்கள். எனவே எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என்றும் கூறினர். காலையில் தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிவரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதாக உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர். 

Next Story