உளிமாவு ஏரி உடைந்ததால் ரூ.70 கோடிக்கு பொருட்கள் நாசம்: பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்
பெங்களூருவில் உளிமாவு ஏரி உடைந்ததால் ரூ.70 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மந்திரி சோமண்ணா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி அரகெரே வார்டில் உளிமாவு ஏரி உள்ளது. நேற்று முன்தினம் ஏரியை தூர்வாருதல், ஏரிப்பகுதியையொட்டி குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. அப்போது ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் உளிமாவு ஏரியையொட்டி உள்ள கிருஷ்ணா லே-அவுட், உளிமாவு, பேங்க் காலனி, சரவஸ்வதிபுரா, விஜயா பாங்க் லே-அவுட், ராகவேந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. 800-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் அங்கு வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கிருந்த பொருட்களும் சேதம் அடைந்தது. இதையடுத்து, ஏரியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 10 லாரிகள், 3 பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் ஏரியில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டது.
ஆனாலும் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடியாததாலும், ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும், அங்கு வசித்தவர்கள் பரிதவித்தனர். நேற்று முன்தினம் இரவு தூங்க முடியாமல் கடும் சிரமத்தை அனுபவித்தனர். முன்னதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படைவீரர்கள் பாதிக்கப்பட்ட மக்களை ரப்பர் படகுகள் மூலமாக மீட்டனர். குறிப்பாக கிருஷ்ணா லே-அவுட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின. அங்கு வசித்தவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை, மீட்பு குழுவினர் மீட்டு இருந்தனர். அவர்கள் உளிமாவு பகுதியில் உள்ள டென்னிஸ் மைதானம் மற்றும் தற்காலிக முகாமில் நேற்று முன்தினம் இரவு தங்க வைக்கப்பட்டனர்.
அதுபோல, அடுக்குமாடி குடியிருப்புகளில் தரை தளத்தில் வசித்தவர்கள் மொட்டை மாடிகளுக்கும், தங்களது குடியிருப்பில் உள்ள மற்ற தளங்களில் வசித்தவர்களின் வீட்டிலும் நேற்று முன்தினம் இரவு தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த நிலையில், உளிமாவு, அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் 2-வது நாளாக நேற்று அதிகாலையில் இருந்து தீவிரமாக நடைபெற்றது. வீடுகளின் உரிமையாளர்களுடன் சேர்ந்து மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்த தண்ணீரை நேற்று முன்தினம் இரவில் இருந்தே தீயணைப்பு படைவீரர்கள் மின் மோட்டார்கள் மூலமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக பெரும்பாலான குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்ற தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான கார்கள், இருசக்கர வாகனங்கள் ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி கிடந்ததால், அந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.
இதற்கிடையே நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு நேற்று காலையில் உணவு, பிற பொருட்கள் மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது. கிருஷ்ணா லே-அவுட் தவிர மற்ற பகுதிகளில் தேங்கி நின்ற நீர் வடிந்ததால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள். அங்கு தங்களது வீடுகளில் இருந்த துணிகள், டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம் அடைந்து கிடப்பதை கண்டு அவர்கள் வேதனை அடைந்தனர்.
உளிமாவு ஏரி உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் டி.வி. உள்ளிட்ட பொருட்கள், வாகனங்கள் சேதம் அடைந்திருப்பதாலும் ஒட்டு மொத்தமாக ரூ.70 கோடிக்கு சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில், ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று காலையில் மாநகராட்சி மேயர் கவுதம்குமார், மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களையும், முகாமில் தங்கி இருந்த மக்களையும் சந்தித்து மேயர் கவுதம்குமார் ஆறுதல் கூறினார்.
அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாகவும், மாநகராட்சி சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் மேயர் கவுதம்குமார் அறிவித்தார். அதே நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றவும், சாலைகளில் உள்ள குப்பை, கழிவுகளை அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மந்திரி சோமண்ணாவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, மந்திரிகள் சோமண்ணா, அசோக் ஆகிய 2 பேரும் உளிமாவு ஏரிக்கு சென்று உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மந்திரிகள் சோமண்ணா, அசோக் ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மந்திரி சோமண்ணா உறுதி அளித்தார்.
பின்னர் மந்திரி சோமண்ணா நிருபர்களிடம் கூறுகையில், “உளிமாவு ஏரி உடைந்திருப்பதால் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும்படி முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டுவசதி துறை சார்பில் புதிதாக வீடு கட்டிக் கொடுக்கப்படும்“ என்றார்.
வீடுகளில் புகுந்த 15 பாம்புகள் பிடிபட்டன
பெங்களூரு உளிமாவு ஏரி உடைந்ததால் வெளியேறிய தண்ணீர், அப்பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய பாம்பு, எலிகள், தவளைகள் உள்ளிட்டவை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் புகுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து, பாம்புகளை பிடிப்பதற்காக மாநகராட்சி தனிக்குழு அமைத்தது. மாநகராட்சியில் உள்ள பாம்பு பிடிப்பவர்கள் உளிமாவு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த பாம்புகளை பிடிக்கும் பணியில் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று மட்டும் 15 பாம்புகள் பிடிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்ததாரருக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூரு உளிமாவு ஏரியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட உடைப்புக்கு ஒப்பந்ததாரர் கார்த்திக் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏரியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.6 கோடியை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. அதன்படி, ஏரியை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்ததாரர் கார்த்திக் எடுத்து செய்து வந்துள்ளார். பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் உள்ள தடுப்பு சுவரில் மண்ணை அள்ளியபோது தான் உடைப்பு ஏற்பட்டு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதற்கு சரியான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
ஏரியில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஒப்பந்ததாரர் கார்த்திக் தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து உளிமாவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஒப்பந்ததாரர் கார்த்திக்கை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story