வீட்டுமனை பட்டா கேட்டு, மாவட்டத்தில் 8 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வீட்டுமனை பட்டா கேட்டு, மாவட்டத்தில் 8 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2019 9:45 PM GMT (Updated: 26 Nov 2019 7:45 PM GMT)

வீட்டுமனை பட்டா கேட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள பொது அலுவலக வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் அடைக்கலசாமி, ஒன்றிய செயலாளர் லட்சாதிபதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். அனைத்து கோவில்கள், மடங்கள், பள்ளிவாசல், தேவாலயங்களுக்கு சொந்தமான நிலங்களில் பல ஆண்டுகாலம் வீடுகட்டி குடியிருந்து வரும் அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

பல வகையான புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழைகளுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு கிராம வருவாய் கணக்கில் போக்குவரத்து செய்யாமல் உள்ளவர்களுக்கு புதிய பட்டா வழங்கி உடனடியாக போக்குவரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு, தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துவிட்டு, கலைந்து சென்றனர்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி அறந்தாங்கி தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரெத்தினவேல் தலைமை தாங்கினார். திருமயம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார்.

மணமேல்குடி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு, தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துவிட்டு, கலைந்து சென்றனர்.

திருவரங்குளம் ஒன்றிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு திருவரங் குளம் ஒன்றிய செயலாளர் வடிவேலு தலைமை தாங்கினார். ஆலங்குடி நகரச்செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் பெரிகுமாரவேல், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். பின்னர் நூற்றுக்கணக்கானோர் வீட்டுமனை மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

இதேபோல் கறம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

பொன்னமராவதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் பொன்னமராவதி தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்கு பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் பக்ருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

Next Story