சேத்துப்பட்டு அருகே, 3 பேர் சாவுக்கு காரணமான டிராக்டர் டிரைவரை கைது செய்யக்கோரி - இறந்தவர்களின் உறவினர்கள் மறியல்


சேத்துப்பட்டு அருகே, 3 பேர் சாவுக்கு காரணமான டிராக்டர் டிரைவரை கைது செய்யக்கோரி - இறந்தவர்களின் உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 27 Nov 2019 4:00 AM IST (Updated: 27 Nov 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு அருகே 3 பேர் பலியான சம்பவத்தில் அதற்கு காரணமான டிராக்டர் டிரைவரை கைது செய்யக்கோரி இறந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி கிராமத்தில் உள்ள சேவியர் தெருவை சேர்ந்தவர்கள் மகிமை (வயது 50), தங்கம் என்கிற ஞானபிரகாசம் (51), அந்தோணி (35). கூலி தொழிலாளிகளான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் சேத்துப்பட்டு அருகே உள்ள முத்தால் அம்மன் நகரில் சென்று கொண்டிருந்தபோது நரசிங்கபுரத்தில் இருந்து செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த மகிமையும், ஞானபிரகாசமும் டிராக்டரில் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த அந்தோணி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த மகிமை, ஞானபிரகாசம், அந்தோணி ஆகியோரின் உறவினர்கள், பொதுமக்கள் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தச்சாம்பாடியில் சேத்துப்பட்டு- தேவிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்னை, சேத்துப்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர் உள்ளிட்ட பகுதிக்கு சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் உள்பட வருவாய் துறையினர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்றும், விபத்தில் உயிரிழந்த மகிமை, ஞானபிரகாசம், அந்தோணி ஆகியோரின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. அதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story